இனி இப்படித்தான்... ’ஒன்றியம்’ குறித்து ஸ்டாலின் தடாலடி!!
முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை குறிப்பிட ஒன்றியம் என்ற சொல்லைத் தான் இனி எப்போதும் பயன்படுத்துவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக மத்திய அரசை ஒன்றிய அரசு என தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் அழைத்து வருகின்றனர். அதேபோல் தமிழகம் என்று அழைக்காமல் தமிழ்நாடு என்றும் அழைத்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு பயன்படுத்தி வரும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையைக் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை குறிப்பிட ஒன்றியம் என்ற சொல்லைத் தான் இனி எப்போதும் பயன்படுத்துவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல. ஒன்றிய அரசு என்ற சொல்லை கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் பயன்படுத்துகிறோம்.
மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதே ஒன்றியம் என்பதற்கு பொருள். எனவே ஒன்றிய அரசு என கூறுவதைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை, அதை சமூக குற்றமாக பார்க்கக்கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல்வரியிலேயே, இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களின் ஒன்றியம் என்ற வரிதான் இடம்பெற்றுள்ளது என தெரிவித்தார்.