கூட்டணி பணிகள் நிறைவு.. முதல் நபராக பிரச்சாரத்திற்கு கிளம்புகிறார் முதல்வர் ஸ்டாலின்..!
பாராளுமன்ற தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது என்பது தெரிந்தது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் தற்போது அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி உடன்பாடு மற்றும் தொகுதிகள் ஒதுக்கீடு பணிகள் முடிவடைந்ததை அடுத்து திமுக போட்டியிடும் 21 தொகுதிகளும் நேற்று அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதல் நபராக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்ய போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி முதல்வர் ஸ்டாலின் மார்ச் 22 ஆம் தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்குவதாகவும் திருச்சி அருகே சிறுகனூர் என்ற பகுதியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இருந்து அவர் தனது பிரச்சாரத்தை ஆரம்பிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன் பின்னர் அவர் திருவாரூரில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் 23ஆம் தேதி பேச இருப்பதாகவும் அதனை முடித்துக் கொண்டு நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற கூட்டணிகள் இன்னும் தொகுதி உடன்பாடே முடியாத நிலையில் திமுக, தொகுதி உடன்பாட்டை முடித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva