1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 26 ஜூன் 2024 (18:52 IST)

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும்  அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன், பி.கே சேகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
 
இந்நிகழ்வில் முனைவர் பட்டம் பெற்ற  கல்விக்கோ கோ.விசுவநாதன் பேசுகையில்.....
 
இந்த கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிய நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்திற்கும்வின் கேப்டன் பல்கலைக் கழகத்திற்கும்  கேப்டன் பல்கலைக்கழகத்திற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இதற்காக அவர்கள் ஒராண்டு காலம் எடுத்துக் கொண்டார்கள். காரணம், அது அரசு பல்கலைக்கழகம். 
 
எனக்கு கடிதம் வந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம், எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது 2024 ஆம் ஆண்டு மே மாதம். இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
குறிப்பாக பேராசிரியர் ஸ்ரீஹரிக்கு நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன். கல்விப் பணியை அவர்கள் மதிக்கிறார்கள், என்று தான் நான் கருதுகிறேன். உலகெங்கும் கல்வி பரவ வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், அதை ஆதரிக்கிறார்கள். உயர் கல்வியில் பின் தங்கிய நாடு, நம் நாடு. 
 
வளர்ந்த நாடுகளில் அது 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை இருக்கிறது.புதிய கல்விக் கொள்கையில், 50 சதவீதமாக வளர வேண்டும் என்று அரசு சொல்லியிருக்கிறது. ஒரு மாநிலம் மட்டுமே உயர் கல்வியில் 50 சதவீதத்தை எட்டியிருக்கிறது. இதற்கு அரசு ஒரு காரணமாக இருந்தாலும், பெற்றோர்கள் தான் முழுமையான காரணம்.நாம் கல்விக்கு அதிகமாக செலவழிப்பதில்லை. மாநில அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி, கல்விக்கு உரிய இடத்தை கொடுத்து அதற்காக அதிகம் செலவழிப்பதில்லை. இந்த வரவு, செலவு பற்றிய மத்திய அரசின் பட்ஜெட் 47 லட்சம் கோடி, அதில் கல்விக்காக ஒரு லட்சம் கோடி தான் கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நாட்களாக மொத்த வருவாயில் 6 சதவீதத்தை கல்விக்காக  செலவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் இன்னும் 3 சதவீதத்தை தாண்டவில்லை. கிட்டதட்ட, அனைத்து மாநிலங்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.
 
உலகத்தில் கல்விக்கு செலவிடும் நாடுகளுக்காக ரேங்க் போடுகிறார்கள். உலகளவில் 180 நாடுகளில் நாம் 155 வது இடத்தில் இருக்கிறோம்.
 
இலவசமாகவோ அல்லது வட்டி இல்லா கடன் பெற்று கொடுக்கும் விதத்திலாவது இதை செய்ய வேண்டும், என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இப்போது நாம் பெற்றிருக்கிற ஐம்பது சதவீதம் போதாது, உயர் கல்வியில் நாம் முதல் மாநிலமாக இருக்க வேண்டும். ஜெர்மனி 75 சதவீதத்திலும், அமெரிக்கா 85 சதவீதத்தில் இருக்கிறது. தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா 100 சதவீதம் முன்னேற்றம் அடைந்திருப்பதாக சொல்கிறார்கள். அந்த கல்வி உயர்ந்தால் தான் பொருளாதாரம் உயரும். 
 
கல்வியால் மட்டுமே குற்றங்கள் குறையும், தனிமனித முன்னேற்றம் ஏற்படும், வறுமை நீங்கும், பொருளாதாரம் உயர்வடையும், நல்ல ஜனநாயக நாட்டு உருவாகும். இவை அனைத்தும் கல்வியால் மட்டுமே முடியும். 
என்றார்.
 
அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்....
 
மகிழ்ச்சி அளிக்கும் சிறப்பான விழாவில் பங்கேற்கும் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி, மேடையில் அமர்ந்திருக்கும் அத்தனை தலைவர்களுக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
நம் முதல்வர் என் மூலமாக வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார். வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு நியூயார்க் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதை அறிந்து மகிழ்கிறேன். முனைவர் கோ.விசுவநாதன் அவர்கள், சிறந்த கல்வியாளர் மட்டுமின்றி தமிழக அரசியலில் முக்கியமான பங்கு வகித்த பெருமைக்குரியவர். 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் மக்களைவை தேர்தலில் போட்டியிட்டு ஏற்றத்தாழ 10 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி டெல்லியில் திமுக-வின் அடையாளமாக திகழ்ந்தவர். பிறகு தமிழக அமைச்சராக பணியாற்றியவர், அண்ணாவின் ஆலோசகராகவும், அவரை பின்பற்றி கல்வி துறையில் அவர் நிகழ்த்திய சாதனைகள் வியக்க வைக்கிறது. 1984 ஆம் ஆண்டு 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட வி.ஐ.டி கல்லூரி என்று பல்லாயிரம் மாணவர்களை உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய கோ.விசுவநாதன் கல்வித்துறையின் ஏந்தலாக இன்று விளங்குகிறார். சமூகத்திற்கு அர்ப்பணிப்புடன் தொண்டாட்டுபவரை விருதுகள், பாராட்டுகள் தானாக தேடி வரும். அதுபோல் தான் கோ.விசுவநாதன் பல விருதுகள் பெற்றிருக்கிறார்.  உயர் கல்விக்காக அவர் ஆற்றிய தொண்டை கவுரவிக்கும் விதத்தில் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருப்பது மகிழ்ச்சி. 
 
நான் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த கெளரவ பட்டத்தின் மூலம் மேலும் பல ஆண்டுகள் உற்சாகமாக கோ.விசுவநாதன் அவர்கள் கல்வி தொண்டாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
 
தொல்.திருமாவளவன் பேசுகையில்....
 
அண்ணன் விஐடி நிறுவனர்,வேந்தர், தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எவ்வளவு பொருப்புணர்வோடு பணியாற்றி வருகிறார் என்பதை நாமும், நாடும் அறியும். இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். பேரறிஞர் அண்ணாவால் அடையாளம் காணப்பட்ட அறிஞர். பெரியார், அண்ணா போன்றோரால் ஈர்க்கப்பட்ட, சமூக நீதி அரசியலையும், தமிழ் இயக்கத்தையும் உறுதியாக பாதுகாத்து வருபவர். இன்று அவர் ஒரு கல்வி தந்தையாக அறியப்பட்டாலும், அரசியலில் பெரும் பங்களிப்பை செலுத்தியிருக்கிறார் என்பதை எனது பார்வையில் மேலோங்கி நிற்பதாக நினைக்கிறேன். வெறும் வேடிக்கை பார்க்காமல், மொழி உணர்வு, இன உணர்வு பேச்சோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கு பணியாற்றக் கூடியவர். சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று பணியாற்றி வருகிறார். அதனால், தான் தமிழ் இயக்கம் என்ற புதிய இயக்கத்தை உருவாக்கி, தமிழ் தேசிய களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற அனைவரையும் ஒன்றினைப்பதற்கான பணியை  செய்து வருகிறார். 
 
கட்சி அடிப்படையில் பலர் சிதறி கடந்தாலும், அனைவரையும் ஒரு மேடையில் இணைப்பதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். பெரியார் கருத்து இந்த மண்ணில் மேலும் மேலும் செழுமை பெற வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.
 
தமிழ்நாட்டில் பெரியார் அரசியலுக்கு எதிராக, தமிழ்நாட்டுக்கு எதிரானவர்கள், இங்கு காலூன்ற பார்க்கிறார்கள், அவர்களை தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது, என்று சொன்னார். அதிமுக, திமுக போன்ற கட்சிகளை பலவீனப்படுத்துவது, ஆபத்தில் முடிந்துவிடும், பெரியாரின் கருத்துக்கும் பேராபத்தாக முடிந்துவிடும், என்று சொன்னவர். அதற்கான பல விசயங்களை என்னிடம் பகிர்ந்துக்கொண்டார்
 
அவரது அனுபவங்களை சொன்னார். மக்கள் நலக்கூட்டணி உங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கானதாக இருக்கலாம், ஆனால் மறுபரிசீலனை செய்யுங்கள், வாக்கு சிதறி விடக்கூடாது, என்றார். இதை அவர் சொல்லியிருக்க தேவையில்லை. அவர் திமுக மற்றும் அதிமுக-வுக்காக பணியாற்றவில்லை. அவரது கவளை என்னவென்றால், தமிழகத்தில் தமிழ் அரசியலுக்கு எதிரான சக்திகள் இங்கு காலூன்றி விடுவார்களோ என்ற கவலை. சனாதான சக்திகள் இங்கு வந்துவிடுவார்களோ, என்று கவலை அவருக்கு. அவர் சொன்னது பற்றி பல முறை பலரிடம் பகிர்ந்திருக்கிறேன். அதன் பிறகு காவிரி நீர் பிரச்சனைக்கு இன்றைய தமிழக முதல்வர், அன்றைய எதிர்க்கட்சி  தலைவர் அண்ணன் ஸ்டாலின் அழைத்த போது, எந்தவித ஆச்சரியமும் இன்றி அவருடன் கைகோர்த்தோம், இன்று தொடர்ந்து அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் எங்கள் கூட்டணி பல வெற்றிகளை கொடுத்து வருகிறார்கள். 
 
அவரது அரசியல் என்பது, மாநில உரிமைகள் பரிபோக கூடாது, மாநில சுயாட்சி பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு பாதிக்கப்பட கூடாது, என்ற புரிதல், அந்த தெளிவு, அந்த பொறுப்புணர்வு அண்ணன் இடத்தில் மேலோங்கி இருப்பதை நான் பார்க்கிறேன். கல்வியை வணிகமாக பார்க்காமல், அதன் மூலம் மக்களை முன்னேற்ற முடியும், சாதி கொடுமைகளில் இருந்து மக்களை மீட்க முடியும், என்ற புரிதல். உயர் கல்வியில் சாதனை படைத்திருக்கிறார் என்பதால் தான் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் தேசிய சராசரியில் 27 சதவீதத்திற்கு கீழ் உள்ளது. தமிழ்நாடு 47 சதவீதத்தில் இருக்கிறது. 
 
இதை ஒரு அரசு மட்டும் செய்ய முடியாது, விஐடி யும் சேர்ந்து செய்திருக்கிறது, என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
 
விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தமிழ் தேசியத்திற்கான பணியாற்றி வரும் கட்சி என்பதால் தான் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட போது என்னை அழைத்து பாராட்டியவர், அதற்காக இந்த நேரத்தில் அண்ணன் விசுவநாதன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் முன்னெடுக்க கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணையாக இருக்கும் என்று சொல்லி, விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் சார்பில் அவரை வாழ்த்தி விடைபெறுகிறேன் என்றார்.