1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (12:28 IST)

இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை? தமிழக அரசை கிழித்து தொங்க விட்ட உயர்நீதி மன்றம்

பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து பெண் பலியான வழக்கை விசாரித்த நீதிபதிகள் “சாலைகளை ஒழுங்காக பராமரிக்க இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை?” என தமிழக அரசை பகிரங்கமாக கேட்டிருக்கிறார்கள்.

பள்ளிக்கரணையில் அ.தி.மு.க பிரமுகர் வைத்த பேனர் விழுந்ததில் ஸ்கூட்டரில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் கீழே விழுந்தார். அவர் மேல் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் பேனர் அச்சடித்த ஆப்செட் நிறுவனத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர். விபத்தில் சம்பந்தப்பட்ட லாரி டிரைவரையும் கைது செய்துள்ளனர். பேனர் வைத்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் தமிழக அரசை சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர்.

குற்றம் நடக்க அனுமதித்து விட்டு, பிறகு குற்றவாளியின் பின்னால் ஓடுவதுதான் அரசின் வேலையா? விழாக்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பது போதாதா? பேனர் வைத்தால்தான் நிகழ்ச்சிகளுக்கு வருவார்களா?

விதிமுறைகளை மீறி இனிமேல் பேனர்கள் வைக்கமாட்டோம் என முதல்வர் அறிவிக்கலாமே?” என நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

மேலும் வழக்கு விசாரணையை இன்று மதியம் 2.15க்கு ஒத்திவைத்த நீதிபதிகள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையும் ஆஜராக வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும் சமூக வலைதலங்களிலும், மக்களிடையேயும் இந்த பிரச்சினை கவனம் பெற்றிருப்பதால் பேனர்கள் வைக்க முழுமையான தடை கொண்டு வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.