திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (09:09 IST)

திடீரென வெடித்த செல்போன்; சார்ஜ் போட்டதால் நேர்ந்த விபரீதம்! – கரூரில் பரபரப்பு!

கரூர் அருகே சார்ஜ் போட்டு வைத்திருந்த செல்போன் வெடித்ததில் மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே முத்துலெட்சுமி என்பவர் தனது செல்போனை சார்ஜ் போட்டு தலையணை அருகிலேயே வைத்து விட்டு உறங்கியுள்ளார். அவரது மகன்கள் இருவர் அருகில் உள்ள அறையில் உறங்கி வந்துள்ளனர். இந்நிலையில் செல்போன் இரவு முழுவதும் சார்ஜ் போட்டு வைக்கப்பட்டிருந்ததால் தீடீரென பயங்கர ஓசையுடன் வெடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அருகில் படுத்துறங்கிக் கொண்டிருந்த தாயின் மீது வேகமாக நெருப்பு பரவி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். செல்போன் வெடித்ததால் வீட்டில் தீ பரவிய நிலையில் அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் சொல்லியுள்ளனர். அவர்கள் உடனடியாக விரைந்து வீட்டிற்குள் சிக்கிய முத்துலெட்சுமியின் மகன்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் மூச்சு திணறலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இரவு முழுவதும் சார்ஜ் போடப்பட்டிருந்ததால் செல்போன் வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. செல்போன் வெடித்து குடும்பத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் கரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.