கள்ளச்சாராய வழக்கில் மேல்முறையீடா? சட்ட அமைச்சர் ரகுபதி முக்கிய தகவல்..!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று சட்ட அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு கூறிய போது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணை என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து முதலமைச்சர் அவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும், சில கட்சிகள் சிபிஐ விசாரணை கூறியதை அரசியலாக தான் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கள்ளச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட யாரும் இதுவரை சிபிஐ விசாரணை கேட்கவில்லை என்றும், அரசியல் கட்சிகள் மட்டுமே சிபிஐ விசாரணை கூறியுள்ளன என்றும் அவர் கூறினார். இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசித்து, உரிய முடிவை உரிய நேரத்தில் எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களை பிடிப்பதற்காக இன்றே பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம் என்றும், எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது என்றும், ஆனால் அதிமுகவுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.
Edited by Siva