செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 13 ஜூன் 2024 (13:14 IST)

காவிரி விவகாரம்.! விவசாயிகள் வேதனை எப்படிப் புரியும்.? முதல்வருக்கு அண்ணாமலை கண்டனம்..!!

Annamalai
வயலில் கான்கிரீட் சாலை அமைத்து நடக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, விவசாயிகள் வேதனை எப்படிப் புரியும் என்றும் காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக  தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காவிரி நீரில், கடந்த ஆண்டு கிடைக்கப் பெற்ற தண்ணீரின் அளவு 81.4 டிஎம்சி மட்டுமே. ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் பெற்றிருக்க வேண்டிய தமிழகம், அதில் பாதி அளவைக் கூட பெறவில்லை என்பது, திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
திமுக, காங்கிரஸ் சந்தர்ப்பவாத இண்டியா கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகளின் நலனை மொத்தமாக அடகு வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றும் காவிரியில் குறித்த அளவு நீர்வரத்து இல்லாததால், இந்த ஆண்டு ஜூன் 12 அன்று, விவசாயத்துக்காகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படாமல், பாசனத்துக்கு நீர் இன்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
 
ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு இது குறித்த எந்தக் கவலையும் இல்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். தன்னை ஒரு டெல்டாக்காரன் என்று கூறிவிட்டு, வயலில் கான்கிரீட் சாலை அமைத்து நடக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, விவசாயிகள் வேதனை எப்படிப் புரியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

 
முதல்வர் ஸ்டாலின், தனது கூட்டணி நலனுக்காக, தமிழக விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு, உடனடியாக, காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.