புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 6 மே 2017 (13:24 IST)

பண மோசடி வழக்கு ; அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி போலீசார் பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.


 

 
2011ம் ஆண்டு ரியல் எஸ்டேட் அதிபர் குமார் என்பவர், சென்னை மைலாப்பூரில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால், பல நாட்கள் ஆகியும் அந்த வீட்டில் குடியிருந்தவர் அந்த வீட்டை காலி செய்து கொடுக்கவில்லை. எனவே, அப்போது எம்.எல்.ஏவாக இருந்த காமராஜின் உதவியை குமார் நாடியிருக்கிறார். இதற்காக, ரூ.30 லட்சம் பணத்தையும் கொடுத்துள்ளார். 
 
ஆனால், அந்த நபர் வீட்டை காலி செய்யவில்லை. இதனால், காமராஜிடம் சென்று குமார் முறையிட்டுள்ளார். மேலும், தான் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது, குமாரை மிரட்டியதோடு, பணத்தை திருப்ப தர முடியாது என காமராஜ் கூறிவிட்டதாக தெரிகிறது. இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தார் குமார். ஆனால், அவர்கள் புகாரை ஏற்கவில்லை. எனவே, 2012ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் குமார் வழக்கு தொடர்ந்தார். 
 
இதையடுத்து, இந்த வழக்கை பதிவு செய்து விசாரிக்கிறோம் என காவல்துறை சார்பில் உறுதியளித்ததை தொடர்ந்து, அந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். ஆனால், 5 வருடங்களாகியும் காமராஜ் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது காமராஜ் அமைச்சராக இருக்கிறார்.
 
இந்நிலையில் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்த்தில் குமார் வழக்கு தொடர்ந்தார். இதில் தீர்ப்பளித்த நீதிபதிகள், காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர். எனவே, வேறுவழியில்லாமல், மன்னார்குடி காவல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.