வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 29 ஜனவரி 2023 (09:02 IST)

கேரட், பீட்ரூட்டை சமவெளியில் சாகுபடி செய்து மண் காப்போம் இயக்கம் சாதனை!

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை சமவெளியில் வெற்றிகரமாக சாகுபடி செய்து ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் கூறுகையில், “எங்களுடைய மண் காப்போம் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாய பயிற்சிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகிறோம். மொத்தம் 60 ஏக்கர் பரப்பில் பல்வேறு விதமான பயிர்களை பரிசோதனை முயற்சியாக வெவ்வேறு இயற்கை நுட்பங்களை பயன்படுத்தி பயிர் செய்து வருகிறோம்.

அந்த வகையில், கோவையில் செம்மேடு கிராமத்தில் உள்ள எங்களுடைய மாதிரி பண்ணையில் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை தலா 30 சென்ட் என்ற பரப்பளவில் பிரதான பயிராக பயிரிட்டோம். 120 நாட்களுக்கு பிறகு தற்போது நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல பருமனாகவும் நீளமாகவும் கேரட் விளைந்துள்ளது.

பொதுவாக காய்கறி கடைக்கு சென்று 1 கிலோ கேரட் வாங்கினால் 12 முதல் 13 கேரட் பிடிக்கும். ஆனால், நாங்கள் எந்தவித ரசாயனங்களையும் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் ஜீவாமிர்தம் மட்டுமே பயன்படுத்தி விளைவித்ததால் 6 அல்லது 7 கேரட்களை எடை போட்டாலே ஒரு கிலோ வந்துவிடும். அதை வைத்து பார்க்கும் போது விளைச்சலும் நல்ல முறையில் வந்துள்ளது. பூச்சி மேலாண்மைக்காகவும், நல்ல விளைச்சலுக்காகவும் வேப்பங்கொட்டை கரைசல் பயன்படுத்தினோம். 

கேரட் மட்டுமின்றி, பீட்ரூட்டின் வளர்ச்சியும் சிறப்பாக வந்துள்ளது. இதைப்போலவே முள்ளங்கி, கொத்தமல்லி ஆகியவற்றையும் பயிர் செய்து வருகிறோம். இந்த முறை மழை அதிகமாக பெய்தபோது ஏற்பட்ட பூஞ்சை தாக்குதலுக்கு புளித்த மோர்க்கரைசல் தெளிக்கப்பட்டு நன்றாக வளர்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டதால், விளைச்சலில் எந்தக்குறையும் ஏற்படவில்லை. நாளை நடக்கவுள்ள அறுவடையில் 1.5 டன் அளவிற்கு விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இதேபோன்று, பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி அரிசியும் நாங்கள் கடந்த 4 வருடமாக முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு இரண்டே கால் டன் விளைச்சல் கிடைத்துள்ளது.  எங்கள் தோட்டத்திற்கு அருகில் ரசாயன விவசாயம் செய்யும் விவசாயிகள் எடுக்கும் விளைச்சலை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி, நாங்கள் பரிசோதனை செய்து வெற்றி பெற்ற இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள்  அனைத்தையும் விவசாயிகளுக்கு நேரடி களப் பயிற்சியாக சொல்லித் தருகிறோம். இதுவரை 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நாங்கள் இயற்கை விவசாய பயிற்சிகள் அளித்துள்ளோம். அதில் நிறைய பேர் வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் விவசாயம் செய்து முன்னோடி விவசாயிகளாக மாறி உள்ளனர். பின்னர், அவர்களுடைய தோட்டத்திலேயே புது விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சிகளை தமிழ்நாடு முழுவதும் கற்றுக்கொடுத்து வருகிறோம்.” என்றார்.