பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது..! கைவிரித்த நீதிமன்றம்..!!
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மதிமுகவின் மனு மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டுமென வேண்டுமென மதிமுக தரப்பில் வாதிடப்பட்டது. ஒரே மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் நீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மதிமுக தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.