ஆர்.கே.நகர் தேர்தல் ; அதிமுகவிற்கு எதிராக திரும்பும் பாஜக - பின்னணி என்ன?
சமீப காலமாக அதிமுக அரசுக்கு எதிராக பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜெ.வின் மறைவிற்கு பின் தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சியை அமைப்போம் என பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் எப்படியாவது பாஜக ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. இதை அவர்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.
அதனால்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுகிறது எனப்புகார் கூறி தமிழிசை சவுந்தரராஜன் தெருவில் சாலை மறியில் போராட்டம் நடத்தினார். இப்படி தேர்தல் நடத்துவதற்கு பதில் தேர்தல் நடத்தாமலேயே இருக்கலாம் எனக்கூறினார். மேலும், இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என பொன். ராதாகிருஷ்ணன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதிமுகவிற்கு எதிராக பாஜகவினர் இப்படி பேச தொடங்கியிருப்பதற்கு காரணம் இருக்கிறது. தற்போது தமிழ்நாடு முழுவதும் கள ஆய்வு செய்ய தொடங்கியுள்ளார் ஆளுநர். அதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதை ஆளுநர் கண்டு கொள்வதில்லை.
அதாவது, தமிழக அரசுக்கு எதிரான புகார்களை ஆளுநர் வழியாக மத்திய அரசு பெறவுள்ளது.
மேலும், ஓ.பி.எஸ், எடப்பாடி உட்பட பல அதிமுக அமைச்சர்களின் ஊழல் புகார்கள் விசாரிக்கப்பட்டு, அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சியை தமிழகத்தில் செயல்படுத்துவதே பாஜகவின் நோக்கம் எனத் தெரிகிறது. அதற்கான ஆதாரங்கள்தான் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அநேகமாக வருகிற ஜனவரி மாதத்திற்குள் பாஜக தனது அதிரடி நடவடிக்கையை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
அதனால்தான் இப்போதிலிருந்து அதிமுகவிற்கு எதிரான கருத்துகளை தமிழிசை சவுந்தராஜன், ஹெச்.ராஜா மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறத் தொடங்கியுள்ளனர் என செய்திகள் வெளிவந்துள்ளது.