ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஜூலை 2024 (15:51 IST)

பதவி இல்லாததால் என்ன செய்வது என்றே தெரியாமல் திமுக உள்ளது: அண்ணாமலை ஆவேசம்..!

Annamalai
மத்திய அமைச்சர் பதவிகளிலிருந்து பல ஆயிரம் கோடி ஊழல் செய்தே பழகிய திமுகவுக்கு, தற்போது பதவி இல்லாமல் என்ன செய்வது என்றே தெரியாமல், பொதுமக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
காங்கிரஸ் ஆட்சியில், ஜனநாயகத்துக்கு விரோதமாகக் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை, அரசியலமைப்புச் சட்டம் படுகொலை தினமாக ஆண்டு தோறும் அனுசரிக்க, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி  அவர்களின் தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்துள்ளது. 
 
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டில், காங்கிரஸ் கட்சி சர்வாதிகாரமாகக் கொண்டு வந்த நெருக்கடி நிலை, பொதுமக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களுக்கும், எத்தனை துயரங்களையும், இடையூறுகளையும் ஏற்படுத்தியது என்பதை, இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். 
 
தங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் மனதைக் குளிர்விக்க, ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக, தமிழக முதலமைச்சர் திரு முக ஸ்டாலின்  அவர்கள், நெருக்கடிக் காலத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாரா என்று கேட்டுள்ளார். 
 
மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போதெல்லாம், திமுகவுக்கு இந்த கோரிக்கைகள் நினைவுக்கு வராதது ஆச்சரியம். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட பிறகு, அடுத்த வந்த 1980ஆம் ஆண்டு தேர்தலில், நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று இந்திரா காந்தி அவர்களுக்கும், அதன் பின் 2004ஆம் ஆண்டு, இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க என்று சோனியா காந்தி அவர்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியிலிருந்து, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற அவர் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்குச் சொல்வாரா?
 
கடந்த 2006ஆம் ஆண்டு, திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. மத்தியில் அன்று காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஆட்சியில், அதிகாரமிக்கக் கட்சியாக, சர்வ வல்லமையுடன் சுற்றிவந்த திமுக, இந்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை? திமுக நினைத்திருந்தால், காங்கிரஸ் கட்சியை வலியுறுத்தியிருக்க முடியாதா? மத்திய அமைச்சர் பதவிகளே பெரிது என்று மௌனமாக இருந்து விட்டு, தற்போது நாடகம் ஆடுவது ஏன்? 
 
கடந்த பத்து ஆண்டு காலமாக, திமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் இல்லை. இனி வரும் ஆண்டுகளிலும் இடம் கிடைக்கப் போவதில்லை. மத்திய அமைச்சர் பதவிகளிலிருந்து பல ஆயிரம் கோடி ஊழல் செய்தே பழகிய திமுகவுக்கு, தற்போது பதவி இல்லாமல் என்ன செய்வது என்றே தெரியாமல், பொதுமக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. 
 
திமுக அரசு, தமிழகத்தில் தங்கள் முதல் கடமையான சட்டம் ஒழுங்கைச் சரிசெய்ய முதலில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும். நீட் தேர்வு மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கும் கிடைத்து வரும் மருத்துவக் கல்வியை, தங்கள் கட்சியினர் வருமானத்துக்காக மட்டுமே பயன்படுத்த முயற்சி செய்வதற்காக, மாநில உரிமை என்ற போலி நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம் என்றும் தமிழக பாஜக சார்பாக முதலமைச்சர் திரு.  முக ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran