திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 ஜனவரி 2024 (13:29 IST)

விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க முயலும் பாஜக நிர்வாகி? துணை போகிறதா அமலாக்கத்துறை? – கிருஷ்ணசாமி கடிதம்!

Formers
சேலம் மாவட்டத்தில் ஏழை விவசாயிகள் இருவரின் நிலத்தை பாஜக நிர்வாகி அபகரிக்க முயல்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சேலம் கிழக்கு மாவட்ட பாஜக செயலாளராக இருப்பவர் குணசேகரன். கல்வராயன் மலை அடிவாரப்பகுதியில் இவருக்கு சொந்தமான நிலத்திற்கு அருகே ஆத்தூரை சேர்ந்த கண்ணையன், கிருஷ்ணன் என்ற இரு சகோதரர்களுக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 1991ம் ஆண்டில் கண்ணையன், கிருஷ்ணன் இருவரும் இந்த நிலத்தை குணசேகரனின் தாயாரிடம் அடமானம் வைத்து பணம் பெற்றதாகவும், அதை திரும்ப செலுத்தாததால் நிலம் தனக்கே சொந்தமானது என்றும் குணசேகரன் தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால் கண்ணையன், கிருஷ்ணன் சகோதரர்கள் அப்படி யாரிடமும் நிலத்தை அடமானம் வைக்கவில்லை என்றும், அடமானம் வைத்தது போல பொய்யான ஆவணங்களை காட்டி குணசேகரன் ஏமாற்ற முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டில் இருந்தே இந்த பிரச்சினை இருந்து வரும் நிலையில் குணசேகரன் தங்களை தாக்க வந்ததாக கண்ணையன், கிருஷ்ணன் அளித்த புகாரில் அந்த சமயம் குணசேகரனை போலீஸார் கைது செய்த சம்பவமும் நடந்துள்ளது. இந்நிலையில் தற்போது கண்ணையன், கிருஷ்ணன் இருவரும் கள்ள நோட்டுகளை பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை அவர்களுக்கு விசாரணை சம்மன் அனுப்பியுள்ளது.

krishnasamy


இது குணசேகரனின் அரசியல் செல்வாக்கால் தங்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல் என கண்ணையன், கிருஷ்ணன் சகோதரர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த விவகாரத்தில் தற்போது புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அமலாக்கத்துறை தலைமை இயக்குனருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ’சேலத்தில் பட்டியல் இன விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க முயலும் பாஜக நிர்வாகியின் செயலுக்கு அமலாக்கத்துறை துணை போகிறது’ என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அமலாக்கத்துறை தலைமை உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது நடை பயணத்தை ஆத்தூரில் தொடங்கும் நிலையில் அப்பகுதி பாஜக மாவட்ட செயளாலர் மீது இந்த நில அபகரிப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K