தீக்குச்சி... இரும்புத்துண்டு...மருந்து அட்டை : ஏ.டி.எம்-மில் கொள்ளையடித்த பீகார் வாலிபர்கள்
பீகாரிலிருந்து சென்னை வந்த இரு வாலிபர்கள் சிறு அளவிலான இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டை ஆகியவற்றைக்கொண்டு நூதன வழியில் ஏ.டி.எம்.ல் கொள்ளையடித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழிலகம் வளாகம், தேனாம்பேட்டை, சிந்தாரிப்பேட்டை உட்பட பல இடங்களில் உள்ள ஏ.டி.எம்களில், பலரின் கணக்கிலிருந்து அவர்களுக்கு தெரியாமலேயே பணத்தை சிலர் எடுத்து வந்ததாக போலீசாரிடம் புகார் அளிக்கப்படது. சில அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரும் பணத்தை பறிகொடுத்துள்ளனர்.
இந்நிலையில், மெரினாவில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சந்தேகிக்கும்படி இரண்டு இளைஞர்கள் சுற்றித் திரிந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில் ஏடிஎம்களில் கொள்ளையடித்தது இவர்கள்தான் என தெரியவந்தது. மேலும், அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோகர்குமார் மற்றும் முன்னாகுமார் என்பது தெரியவந்தது.
பணத்தை திருவதற்காக அவர்கள் மெஷினில் எந்த கருவியையும் பொருத்தி பின் நம்பரை திருடவில்லை. முதலில், ஒரு சீவிய சிறிய தீக்குச்சி அல்லது இரும்புத்துண்டு அல்லது மருந்து அட்டையை பின் நம்பரை அழுத்தும் கீ போர்டின் ஓரத்தில் சொருகி விடுவார்கள். பணம் எடுக்க வருபவர் கார்டை நுழைத்து விட்டு, எண்ணை அழுத்திய பின்னரும் பணம் வராது. எனவே, இயந்திரத்தில் ஏதோ கோளாறு என நினைத்து சென்றுவிடுவார்கள். அப்போது, அருகிலிருக்கும் பண எந்திரத்தின் அருகில் பணம் எடுப்பது போல் பாவனை செய்யும் இவர்கள் வாடிக்கையாளர் அழுத்திய பின் நம்பரை மனதில் மனப்பாடம் செய்து கொள்வார்கள்.
வாடிக்கையாளர்கள் பின் நம்பர் போடுவதை மறைமுகமாக பார்த்துவிட்டு, பின் அவர்கள் சென்றவுடன், அந்த பரிமாற்றம் முடியாமல் இருக்கும்பட்சத்தில் பணம் எடுத்துள்ளனர். இப்படி யார் எல்லாம் முழுதாக பண பரிமாற்றத்தை முடிக்காமல் செல்கிறார்கள் என பார்த்து பார்த்து பணம் திருடி இருக்கிறார்கள். புதிய எந்திரத்தில் டஸ் ஸ்கீரின் இருக்கும் என்பதால், பழைய டைப் ஏ.டி.எம் எந்திரங்கள் இருக்கும் ஏ.டிஎம் மையங்களை குறிவைத்து இவர்கள் மோசடி செய்துள்ளனர்.
திருடிய பணத்தை வைத்து அவர்கள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். பீகாரிலிருந்து சென்னைக்கு ஒவ்வொரு முறையும் விமானத்தில் வந்து கொள்ளையடித்துள்ளனர். இவர்களை கைது செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம் மையத்தில் உள்ள எந்திரத்தில் ஏதேனும் ஒரு காரணத்தில் பணம் வரவில்லை என்றால் கீ போர்டில் உள்ள ‘கேன்சல்’ பட்டனை அழுத்தி விட்டால் இப்படி பணம் கொள்ளையடிப்பதை தடுக்க முடியும் என போலீசார் கூறியுள்ளனர்.