திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 12 மே 2022 (18:28 IST)

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் தினசரி நிகழ்வுகளாகிவிடும்: அன்புமணி எச்சரிக்கை

Anbumani
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் தினசரி நிகழ்வுகளாகிவிடும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை செய்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த குரும்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரது  குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்
 
வெங்கடேஷையும் சேர்த்து தமிழ்நாட்டில் கடந்த 9 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருக்கிறது. எந்த சமூகக் கேடுகளையும் விட அதிக உயிர்ப்பலி வாங்கும் கேடாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுத்துள்ளது!
 
ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்யவில்லை என்றால், ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் தினசரி நிகழ்வுகளாகி விடக் கூடும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. அத்தகைய நிலை ஏற்படுவதை அரசு தடுக்க வேண்டும்!
 
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் ஆபத்தானது.  இத்தகைய அலட்சியப் போக்கை கைவிட்டு, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும். அதன் மூலம் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க வேண்டும்!