அம்மா என அழைக்கப்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதே பெயரில் ஏராளமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றிலும் இந்தத் திட்டங்கள், வெற்றிகரமாக மக்களைச் சென்றடைந்துள்ளன. அம்மா என்ற பெயரில் ஜெயலலிதா படத்துடன் முன்வைக்கப் படும் இவை, அடித்தட்டு மக்களிடம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. விலைவாசி உயர்விலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் மலிவு விலையில் தரமான பொருள்களை விற்கும் இந்தத் திட்டங்கள், அதிமுகவின் தேர்தல் வெற்றிக்கும் மறைமுகமாக உதவுகிறது.
அண்மைக் காலமாக விஸ்வரூபம் எடுத்து வரும் அம்மா திட்டங்களின் சிறு தொகுப்பு இங்கே:
அம்மா உணவகம்!
விலைவாசி உயர்வின் தாக்கத்தில் இருந்து ஏழை, எளிய மக்கள் விடுபட்டு மலிவு விலையில் தரமான உணவை வயிறார உண்ணும் வகையில் 15 அம்மா உணவகங்கள் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி திறக்கப்பட்டது. பின்னர், இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் விரிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சிப் பகுதிகளிலும், சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.
தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவ மனை, கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாநகராட்சியில் 11 அம்மா உணவகங்களும், இதர மாநகராட்சிகளில் தலா 10 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இதன் அடுத்த கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் கூடுதலாக தலா ஒரு அம்மா உணவகம் வீதம் 200 அம்மா உணவகங்கள், ஏற்கெனவே அம்மா உணவகங்கள் நிறுவப்பட்ட மதுரை, வேலூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி தவிர்த்து ஏனைய மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவ மனைகளில் தலா ஒன்று வீதம் 27 அம்மா உணவகங்கள், 124 நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்கள் உள்பட மொத்தம் 360 புதிய அம்மா உணவகங்கள் திறக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் 294 அம்மா உணவகங்களுடன் புதிதாகத் திறக்கவுள்ள 360-ஐயும் சேர்த்து, இனி மொத்தம் 654 அம்மா உணவகங்கள் மக்களின் தேவையை நிறைவு செய்யும் என்று முதல்வர் ஜெயலலிதா, தமது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகில் உள்ள அம்மா உணவகங்களை எகிப்து அதிகாரிகள் சமீபத்தில் பார்வையிட்டனர். அங்கு சத்தான உணவுகள் சுத்தமாக, சுகாதாரமாகத் தயாரிக்கப்படுவது குறித்து அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த 2 அம்மா உணவகங்களுக்கும் விரைவில் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் வழங்கப்படும் என்று ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கும் க்வெஸ்ட் நிறுவனம் கூறியது.
இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. மேலும் கலவை சாதங்களும் மாலையில் சப்பாத்தியும் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
அம்மா குடிநீர்!
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் ‘அம்மா குடிநீர்’ உற்பத்தி நிலையங்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான 15.9.2013 அன்று திறந்து வைக்கப்பட்டு, அன்றைய தினமே விற்பனையும் துவங்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா 21.6.2013 அன்று அறிவித்தார்.
அதன் முதற்கட்டமாக, திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் 2.47 ஏக்கர் பரப்பளவில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக, சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் உற்பத்தி திறன் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் ஆகும்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 1 லிட்டர் அளவு பிளாஸ்டிக் பாட்டில்களாக நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களிலும் பாட்டில் ஒன்று 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
1 லிட்டர் குடிநீர் பாட்டில் ரெயில்வே நிர்வாகத்தால் 15 ரூபாய்க்கும், தனியார் நிறுவனங்களால் 20 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், அம்மா குடிநீர் குறைந்த விலையான 10 ரூபாய்க்கு விற்கப்படுவது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டம் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் செயல்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக மேலும் 9 இடங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
அம்மா குடிநீர் உற்பத்தி நிலையத்தில் பெறப்படும் அதிக அளவு நீரினைக் கருத்தில் கொண்டு மேலும் ஓர் 'அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம்' அமைக்கப்படும். இதன் மூலம், நாளொன்றுக்கு மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக கிடைக்கும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அம்மா உப்பு!
தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் மூன்று வகைகளில் தயாரிக்கப்பட்டுள்ள "அம்மா உப்பு' பாக்கெட்டுகளின் விற்பனையை 2014 ஜூன் 11 அன்று முதல்வர் ஜெயலலிதா சென்னையில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து சென்னை, வேலூர், கடலூர், நாமக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில், பிரபல சூப்பர் மார்க்கெட்டுகள் முதல் தெருமுனை மளிகைக் கடைகள் வரை தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ள விற்பனை முகவர்கள் மூலம் ஜூன் 18 அன்று வரை 86 டன் அம்மா உப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
வெளிச்சந்தையில் அம்மா உப்பு விநியோகம் செய்ய இதுவரை 29 மாவட்டங்களில் விற்பனை முகவர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தங்கள் பணியை தொடங்கி உள்ளனர். இவர்களைத் தவிர சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அமுதம் அங்காடிகள் மற்றும் பிற மாவட்டங்களில் கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டுகளில் அம்மா உப்பு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் 6 டன் உள்பட தமிழகம் முழுவதும் வெளிச்சந்தை மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ள 86 டன் அம்மா உப்பில், 10 டன் அளவுக்கு விற்பனை ஆகி உள்ளது. மூன்று வகையான உப்புகள் விநியோகம் செய்யப்பட்டாலும் சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, ஒப்பீட்டளவில் சற்று அதிகம் விநியோகம் செய்யப்படுகிறது என உப்பு நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அம்மா மருந்தகம்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா, 2014 ஜூன் 26 அன்று (26.6.2014) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறையின் சார்பில் நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், நங்கநல்லூர் கூட்டுறவு பண்டகச் சாலையில் 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மருந்தகத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 90 லட்சம் ரூபாய் செலவில் கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 9 அம்மா மருந்தகங்களைத் திறந்து வைத்தார்.
மேலும், கடலூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம்; ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம்; மதுரை மாவட்டம் - பேரையூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் மற்றும் கே.கே. நகரில் அமைந்துள்ள மதுரா கோட்ஸ் பணியாளர் கூட்டுறவு பண்டக சாலை; சேலம் மாவட்டம் - செர்ரி ரோட்டில் அமைந்துள்ள சேலம் என்.ஜி.ஓ. கூட்டுறவு பண்டக சாலை மற்றும் தாரமங்கலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை; சிவகங்கை மாவட்டம் - காரைக்குடியில் அமைந்துள்ள சிவகங்கை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை; விருதுநகர் மாவட்டம் - சிவகாசி கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் ஆகிய இடங்களில் தலா 10 லட்சம் ரூபாய் செலவில் அமைந்துள்ள 9 அம்மா மருந்தகங்களையும் திறந்து வைத்தார்.
ஜெயலலிதா திறந்து வைத்துள்ள அம்மா மருந்தகங்கள், மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான பேருந்து நிலையங்கள், மார்க்கெட் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த மருந்தகங்களில் உயிர்காக்கும் மருந்துகளைச் சிறப்பாகப் பாதுகாக்கும் வகையில் குளிர்சாதனப் பெட்டி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் கணினி பயிற்சி பெற்ற விற்பனையாளர்களோடு வெளிக்கொணர்வு முறை மூலம் மருந்தாளுநர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
அம்மா திரையரங்கம்!
வீடுதோறும் இலவச தொலைக்காட்சிப் பெட்டி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசு கேபிள் டிவி தொடங்கி, சில பகுதிகளில் செயல்பாட்டில் உள்ளது. இவற்றில் எந்நேரமும் திரைப்படங்கள் பார்க்க வாய்ப்புகள் உள்ளன. இலவச மடிக்கணினிகளையும் பலர், குறுந்தகடு மூலம் திரைப்படம் பார்க்கப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், மக்களுக்குத் திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவம் குறைந்து வருகிறது. மேலும், வர்க்கரீதியாக திரையரங்குகள் மக்களை பிரித்துள்ளன. சென்னையில் இயங்கும் மாயாஜால், சத்யம் போன்ற மல்டி பிளக்ஸ்களிலும் சிட்டி சென்டர் போன்ற மால்களில் இயங்கும் திரையரங்குகளிலும் ஒரே பிரிவைச் சார்ந்தவர்களே படம் பார்க்கின்றனர். அடித்தட்டு மக்களை அங்கு காண முடிவதில்லை.
இது ஒரு புறம் என்றால் எளிய மக்களின் கொண்டாட்ட வெளிகளாக இருந்த சிறிய திரையரங்குகள் நஷ்டத்தால் இடிக்கப்பட்டு கல்யாண மண்டபங்களாகவும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸாகவும் உருமாறி வருகின்றன. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் இயங்கும் அம்மா திரையரங்குகளை உருவாக்கும் திட்டத்தைச் சென்னை மாநகராட்சி முன் வைத்துள்ளது.
இந்த திரையரங்கங்களில் சிறுமுதலீட்டுப் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்மா காய்கறி கடை!
வெளிச்சந்தையில் தாறு மாறாக உள்ள காய்கறிகளின் விலையை கட்டுக்குள் வைக்கவும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பசுமையான காய்கறிகளை அளிக்கவும் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், போரூர், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 30 பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு காய்கறி கடைகளை 2013 ஜூன் 20ஆம் தேதி, முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
பண்ணைப் பசுமை நுகர்வோர் கூட்டுறவு காய்கறி கடைகளுக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தநிலையில், அந்த கடைகளுக்கு காய்கறிகளை துரிதமாகவும், பறித்தவுடனேயே கொண்டு வரவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊட்டி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எந்த இடைத்தரகர்களும் இல்லாமல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் 18 டன் முதல் 20 டன் வரையான, பசுமையான காய்கறிகள் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு காய்கறி கடைகளுக்கு நாள்தோறும் கொண்டு வரப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் வாடகை கனரக வாகனங்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால், பொருள் செலவும், கால தாமதமும் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க, 3 கனரக வாகனங்கள், நடமாடும் காய்கறிகடைகள் நடத்த 2 கனரக வாகனங்கள் என, மொத்தம் 5 கனரக வாகனங்களும் வாங்க, 70 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.
பண்ணை பசுமை நுகர்வோர் கடையின் மூலம் 2014 ஜூன் 15ஆம் தேதி வரை, 3,578.673 டன் காய்கறி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.9.9 கோடி ஆகும்.
அம்மா தங்கும் விடுதிகள்!
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, 25.6.2014 அன்று தலைமைச் செயலகத்தில், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கான 12 அரசு விடுதிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை இல்லம் ஆகியவற்றைத் திறந்து வைத்து, காஞ்சிபுரம் மாவட்டம் – தாம்பரம் அரசு சேவை இல்ல ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள துயிற்கூடத்திற்கு (Dormitory) அடிக்கல் நாட்டினார்.
வெளியூரில், குறிப்பாக மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் பெருநகரங்களில் தங்கி, பணிக்குச் செல்லும் மகளிருக்குக் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான உறைவிடங்கள் தேவைப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, பெண்களுக்கு பாதுகாப்பான உறைவிட வசதிகளைச் செய்து தரும் வகையில் அரசு விடுதிகள் ஏற்படுத்திட, தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, சென்னை – பெரம்பூர், வியாசர்பாடி, பள்ளிக்கரணை, சேலையூர் ஆகிய இடங்களில் 6 அரசு விடுதிகள்; காஞ்சிபுரம் மாவட்டம் - ஒக்கியம்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் 3 அரசு விடுதிகள்; விழுப்புரம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு அரசு விடுதி, என மொத்தம் பணிபுரியும் 12 அரசு விடுதிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா திறந்து வைத்தார்.
பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகளில் தங்குவதற்கு மாத வாடகையாக சென்னையில் 300 ரூபாய், மாநிலத்தின் பிற இடங்களில் 200 ரூபாய் எனக் கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழைப் பெண்கள் பயனடையும் வகையில் துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்த விடுதிகளில் சேர்வதற்குத் தகுதியான மாத வருமான உச்ச வரம்பு சென்னைக்கு 25 ஆயிரம் ரூபாய் எனவும், மாநிலத்தின் பிற இடங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விடுதிகளில் உணவுக் கட்டணம், மின்கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவுகள் போன்றவை விடுதியில் தங்கும் பெண்களால் பகிர்ந்து கொள்ளப்படும். விடுதிப் பணியாளர்களுக்கான ஊதியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகளில் விசாலமான தங்கும் அறைகளுடன் வரவேற்பறை, துயில் கூடம், சமையல் அறை, வைப்பறை மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை, குளியல் அறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது வாடகை கட்டடங்களில் துவக்கி வைக்கப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான இந்த அரசு விடுதிகள், விரைவில் சொந்தக் கட்டடங்களில் செயல்பட ஏதுவாக, தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார்.
மேலும், குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் சூழலுள்ள மாவட்டங்களான கிருஷ்ணகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், குழந்தைத் திருமணங்களிலிருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தைகளைப் பாதுகாத்து, கல்வியைத் தொடர வழிவகை செய்யும் வகையில் அந்த மாவட்டங்களில் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக இரண்டு அரசு சேவை இல்லங்கள் தொடங்கப்படும் என்று 2013-2014ஆம் ஆண்டு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை இல்லத்தை தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இந்தச் சேவை இல்லத்தில் குழந்தைத் திருமணங்களிலிருந்து மீட்கப்பட்ட சிறுமிகள் தவிர ஆதரவற்ற வளரிளம் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர் தங்கி பயனடைவார்கள். மேலும், இங்கு தங்கிப் பயன் பெறும் பெண்களுக்கு தங்குமிடம், உணவு, உடை, சுகாதாரம், மருத்துவ வசதி, பாதியில் படிப்பினை நிறுத்தியவர்களுக்கு தொடர்ந்து படிக்க வசதிகள், உயர் கல்வி பெறுவதற்கான நிதியுதவி மற்றும் தொழிற் பயிற்சி ஆகியவை வழங்கப்படும்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் - தாம்பரம் அரசு சேவை இல்ல ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள துயிற்கூடத்திற்கு (Dormitory) தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் திருமதி பா. வளர்மதி, தலைமைச் செயலாளர் திரு கன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., (ஓய்வு), சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறைச் செயலாளர் பெ.மு.பஷீர் அஹமது, இ.ஆ.ப., சமூக நல ஆணையர் வே.மு.சேவியர் கிறிசோ நாயகம், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
'அம்மா விதைகள்'
அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என வளரும் அம்மா திட்டங்கள் வரிசையில் அடுத்த அறிவிப்பாக வந்துள்ளது, 'அம்மா விதைகள்'. இதற்கெனத் தரமான, சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்வதற்காக, 156 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை ஒன்றை ஏற்படுத்த, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ், 2014 ஆகஸ்டு 7ஆம் தேதி அவர் அறிவித்ததாவது:
தமிழக விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை அதிகளவில் உபயோகிப்பதை ஊக்குவிக்கும் வகையில், அரசு விதைப் பண்ணைகள், விதை உற்பத்தி செய்யும் நிலையங்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து, உரிய பணியாளர்களை நியமித்து, 156 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை ஒன்று ஏற்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு உற்பத்தி செய்யப்படும் தரமான, சான்று பெற்ற விதைகள் “அம்மா SEEDS” என்ற பெயரில் “அம்மா சேவை மையம்” விற்பனை வாயில்கள் மூலம் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
ரூ.190க்கு அம்மா சிமெண்ட்
அம்மா திட்டங்களின் வரிசையில் அடுத்த அதிரடியாக, அம்மா சிமெண்ட் பிறந்துள்ளது. சிமெண்ட் விலை ஏற்றத்தினால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், சலுகை விலையில் சிமெண்ட் விற்பனை செய்யும் விதமாக “அம்மா சிமெண்ட் திட்டம்” அமையும். இது, நடுத்தர மக்களுடனான ஜெயலலிதாவின் பந்தத்தை சிமெண்ட்டை விட உறுதியாகக் கட்டி எழுப்பும் என்று எதிர்பார்க்கலாம்.
அம்மா சிமெண்ட் திட்டம்” குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு:
ஏழைகள் ஏற்றம் பெற வேண்டும்; ஏழைகளின் கனவுகள் நனவாக வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் வகையில், அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர்த் திட்டம், அம்மா உப்பு, அம்மா விதைகள், அம்மா மருந்தகங்கள் என பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது எனது தலைமையிலான அரசு. இந்த வரிசையில், வீடு கட்டும் பொருட்களில் முக்கியமானதாக விளங்கும் சிமெண்டினைக் குறைந்த விலையில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவது குறித்து அரசு அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்தேன்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சிமெண்ட் உற்பத்தித் திறன்; அந்த நிறுவனங்கள் தற்போது செய்யும் உற்பத்தி; அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரப் பெற்று விற்பனையாகும் சிமெண்ட் ஆகியவை குறித்து நான் கேட்டறிந்தேன்.
தமிழ்நாட்டில் மாதமொன்றுக்குச் சராசரியாக 17 முதல் 18 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உபயோகப்படுத்தப்படுகிறது என்றும்; இதில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து மாதமொன்றுக்கு 4 முதல் 4.5 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் வரப் பெற்று விற்பனையாகி வந்தது என்றும்; இது தமிழ்நாட்டில் விற்பனையாகும் மொத்த சிமெண்ட்டில் நான்கில் ஒரு பங்காகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அண்டை மாநிலங்களிலுள்ள சிமெண்ட் நிறுவனங்கள், குறிப்பாக ஆந்திராவில் உள்ள சிமெண்ட் நிறுவனங்கள், சிமெண்ட் விலையை மூட்டை ஒன்றுக்கு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன என்றும், இது தற்போது மூட்டை ஒன்றுக்கு 310 ரூபாய் என்ற அளவில் ஆந்திர பிரதேசத்தில் விற்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக, முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் சிமெண்ட் அளவு மாதமொன்றுக்கு 1.50 லட்சம் முதல் 3 லட்சம் மெட்ரிக் டன் வரை குறைந்தது. இது முந்தைய வருகையில் 35 முதல் 60 விழுக்காடு மட்டுமே ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சிமெண்ட் விலையை ஏற்றுவதற்கு உரிய சாதகமான சூழ்நிலையை அமைத்துக் கொடுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிமெண்ட் விலை ஏற்றத்தினால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், சலுகை விலையில் சிமெண்ட் விற்பனை செய்யும் “அம்மா சிமெண்ட் திட்டம்” என்னும் திட்டத்தை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின்படி,
1. தமிழ்நாட்டில் உள்ள தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து மாதமொன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் கொள்முதல் செய்யப்படும்.
2. இந்த சிமெண்ட் மூட்டைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 470 கிடங்குகளில் இருப்பு வைத்து, மூட்டை ஒன்று 190 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.
3. இத்திட்டத்தின் கீழ், வீடு கட்டுவோர்கள் 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதம் அதிக பட்சம் 1500 சதுர அடிக்கு 750 மூட்டைகள் வரை சலுகை விலையில் சிமெண்ட் பெற்றுக் கொள்ளலாம்.
4. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கட்டட திட்ட வரை படத்தையோ அல்லது கிராம நிர்வாக அலுவலர் / வருவாய்த் துறை அலுவலர் / பஞ்சாயத்து யூனியன் மேற்பார்வையாளர் / பஞ்சாயத்து யூனியன் சாலை ஆய்வாளரின் சான்றிதழையோ பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும்.
5. வீடுகள் புதுப்பிக்க மற்றும் பழுது பார்க்க 10 முதல் 100 மூட்டைகள் வரை சிமெண்ட் விற்பனை செய்யப்படும்.
6. இத்திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் ஒருங்கிணைப்பு முகமையாக, Nodal Agency ஆகச் செயல்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முகவர்களாகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படும்.
7. இந்த சிமெண்ட் விற்பனை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 220 கிட்டங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 250 கிட்டங்கிகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
8. மேலும், மாவட்ட விநியோக மற்றும் விற்பனை சங்கங்களுக்குச் (District Supply and Marketing Societies) சொந்தமான கடைகளின் மூலமாக அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 400 மூட்டைகள் இருப்பு வைத்து, பொதுமக்களுக்கு சிமெண்ட் விற்பனை செய்யும் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியாளரால் தேர்ந்தெடுக்கப்படும் மகளிர் சுய உதவிக் குழுவின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நடைமுறைப்படுத்தும்.
9. ஊரக வளர்ச்சித் துறையின் கிட்டங்கிகளின் மூலமாக விற்பனை செய்யப்படும் சிமெண்ட்டைப் பெற்று வழங்கிட, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல / மண்டல மேலாளர் ஒருங்கிணைப்பு முகவராக தொடர்ந்து செயல்படுவார். ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மாவட்டங்களில் செயல்படும் கிட்டங்கிகளின் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமிக்கப்படுவார்.
10. பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் மூலம் ஒரு மூட்டை சிமெண்ட் 220 ரூபாய் என்ற விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல், இந்தத் திட்டங்களின் பயனாளிகளுக்கும் “அம்மா சிமெண்ட்” திட்டத்தின் கீழ் சிமெண்ட் வழங்கப்படும்.
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை மூலம் ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் சுமை வெகுவாகக் குறைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அம்மா திட்டம் (விரைவு பட்டா வழங்கும் திட்டம்)
மக்களைத் தேடி வருவாய்த் துறை என்ற அம்மா திட்டம், மக்கள் அதிகாரிகளைத் தேடி மனுக்கள் கொடுத்து அதற்குரிய பரிகாரங்கள் பெறக் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வருவாய்த் துறை அலுவலர்களே வாரத்திற்கு (வியாழக்கிழமை) ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து அங்குள்ள மக்களின் குறைகளை மனுக்களாக எழுதிப் பெற்று, தகுதி உள்ள நபர்களுக்கு அன்றைய தினமே நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் செய்தல், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் அன்றைய தினமே வழங்கப்படுகிறது.
அரசு விரைவுப்பட்டா மாறுதலுக்காக பல ஆண்டு காலம் அலைந்து அவற்றைப் பெறுவதற்குக் காலத்தையும், நேரத்தையும் வீணாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக விரைவுப் பட்டா மாறுதல் முகாம் நடத்தப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகைய அம்மா திட்டங்களால், ஏழை மக்கள் அம்மம்மா என வியந்து பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய திட்டங்கள், மேலும் பல துறைகளிலும் தொடங்கப்படும் எனத் தெரிகிறது. எந்தெந்தப் பொருட்களையும் சேவைகளையும் அம்மா பெயரால் வழங்கலாம் என அனைத்து அமைச்சகங்களும் தீவிரமாக யோசித்து வருகின்றன.