அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் ரூ.2000 மகளிர் உதவித்தொகை: பொள்ளாச்சி ஜெயராமன்
தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் மகளிர் உதவி தொகை ₹2000 ஆக உயர்த்தப்படும் என அதிமுகவின் திருப்பூர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது திமுக ஆட்சியில் மகளிருக்கு ₹1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அதிமுக ஆட்சி அமைந்த உடன் ₹2000 வழங்கப்படும் என அதிமுகவே தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக திருப்பூர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், "ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், மீண்டும் அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்" என்று கூறினார்.
அதேபோல், "மின்கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி உயர்ந்து விட்டன. பாதாள சாக்கடை வரை 129 சதவீதம் முடிந்துவிட்டது. நாய், பூனை வளர்த்தாலும், பூனை குட்டி போட்டாலும் கூட வரி விதிக்கிறார்கள்" எனக் கூறினார்.
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு காலம் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை என்றும், ஆனால் இன்று வீட்டு வரி 100% உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், "எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைந்த உடன் அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ₹2000 வழங்கப்படும். இன்னும் பத்து அமாவாசையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமையும்" என அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran