வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2023 (16:02 IST)

வேளாண்மை பட்ஜெட் வேதனையின் விழும்பிற்கு தள்ளும் வகையில் அமைந்துள்ளது-டிடிவி. தினகரன்

dinakaran
முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்து  2 ஆண்டுகள்  நிறையவடைய உள்ளது. இந்த நிலையில்,  தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் நேற்று சட்டசபையில்  2023  ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், இன்று. தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

இந்த வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன். விவசாயிகள் செழித்தோங்க திட்டங்கள் இல்லை  என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

‘’வேளாண்மை துறை அமைச்சர் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் தங்கள் வாழ்வில் செழிப்பதற்கான புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

வேளாண்மைக்கான நிலப்பரப்பு குறைந்து வருவதாகவும், வேளாண் நிலங்கள் மனைகளாக மாற்றப்படுவதாகவும் வேளாண்மைத்துறை அமைச்சர் கவலை தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வேளாண்மை அல்லாத திட்டங்களுக்காக விளை நிலங்களை அரசே கையகப்படுத்தி வரும் நிலையில், அதற்கு மாற்று நடவடிக்கை என்ன என்பதை வேளாண் பட்ஜெட்டில் ஏன் சொல்லவில்லை?

கொள்முதல் நேரடி நிலையங்கள் அதிகம் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று அமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கனவே உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படாமால், திறந்த வெளியில் வைக்கப்பட்ட விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாவதைத் தடுக்கவும், நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பணம் வசூலிப்பதைத் தடுப்பதற்கும் வழிமுறைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

கரும்பு டன் ஒன்றுக்கு மத்திய அரசின் ரூ.2821 தொகையுடன் கூடுதலாக ரூ.195 வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 என்று திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் எத்தனை வேளாண் பட்ஜெட்கள் தாக்கலாவதற்கு விவசாயிகள் காத்திருக்க வேண்டுமோ என தெரியவில்லை.

கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவை தொகையை பெற்றுத்தர என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஏதும் அறிவிக்கவில்லை.

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டபோதிலும், நாட்டு மக்களுக்கு உணவு உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய வகையில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கான சிறப்பு திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தையே ஏற்படுத்தும்.

விவசாயிகளின் முக்கிய ஆதாரமாக திகழும் நீராதாரத்தை வளப்படுத்தும் நதிநீர் இணைப்பு திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நதிநீர் இணைப்பு திட்டங்களின் நிலை என்ன என்பது குறித்தும் வேளாண்மை பட்ஜெட்டில் அமைச்சர் குறிப்பிட மறந்தது ஏன்? பருவநிலை மாற்றம் காரணமாக உரிய நேரத்தில் மழை பெய்யாமல் பருவம் தவறி மழை பெய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, விவசாயிகள் பாதிக்கப்படாதவாறு உரிய நீர் மேலாண்மை திட்டம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு செயல்படுத்துவது தொடர்பாக திட்டம் ஏதும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மொத்தத்தல் திமுக அரசு 3 வது முறையாக தாக்கல் செய்துள்ள வேளாண்மை பட்ஜெட் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முழுமையடையச் செய்வதாக இல்லாமல் அவர்களை மேலும் வேதனையின் விழும்பிற்கு தள்ளும் வகையில் அமைந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.