வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (15:41 IST)

உல்லாசத்துக்குத் தடையாக இருந்த கணவரையும் குழந்தையையும் கொடூரமாகக் கொலை செய்த இளம்பெண்

உல்லாசத்துக்குத் தடையாக இருந்ததால் இளம்பெண் ஒருவர் தனது கணவரையும் பெற்ற மகனையும் கள்ளக்காதலனுடன் சேர்ந்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

திண்டிவனம் அருகே தீவனூரை சேர்ந்தவர் 45 வயதுடைய சிவா. இவர் பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி அம்சலா இறந்ததையடுத்து,கடந்த 2009 ஆம் ஆண்டு இதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மீனாட்சி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி ஆசூர் அருகே சிவா ஓட்டிச் சென்ற பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிவா உயிரிழந்தார். இதையடுத்து மீனாட்சி, குழந்தைகள் தாமரைச் செல்வன், பால சூரியாவுடன் கோலியனூரில் வாடகை வீடு எடுத்து தங்கினார்.

இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன்னர் குழந்தை பால சூரியா தலையில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சந்தேக மரணம் என்று காவல் துறையினர் வழக்கை முடித்தனர்.

இதைத் தொடர்ந்து, 4 வயதுடைய தாமரைச் செல்வனை மீனாட்சி அடித்து சித்ரவதை செய்வதை பார்த்த பொதுமக்கள் வளவனூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீனாட்சியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இது குறித்து மீனாட்சி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-

எனக்கும், என் கணவரின் உறவினர் சுரேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக் காதலானது. அடிக்கடி தனிமையில் சந்தித்து இருவரும் உல்லாசமாக இருந்தோம்.

இது எனது கணவருக்குத் தெரிய வந்ததால் அவர் கண்டித்தார். இதனால் அவருக்குப் பாலில் விஷமும், சட்டினியில் பூச்சி மருந்தும் கலந்து கொடுத்தேன். ஆனால் அவர் உயிர் தப்பி விட்டார்.

இதையடுத்து சுரேசுடன் சேர்ந்து திட்டமிட்டு விபத்துபோல் வேன் ஏற்றி கணவரை கொலை செய்தேன். பின்னர் கோலியனூருக்கு இடம்பெயர்ந்து சுரேசுடன் வாழ்ந்து வந்தேன்.

அங்கு உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் பால சூரியாவை, சுரேஷ் அடித்துக் கொன்றார். மாடியில் இருந்து குழந்தை தவறி விழுந்து விட்டதாக நாடகமாடினோம்.

தாமரைச் செல்வனை சித்ரவதை செய்தபோது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் காவல் துறையினரிடம் மாட்டிக் கொண்டோம். இவ்வாறு மீனாட்சி வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து சிவா, பால சூரியா சாவு வழக்குகளை கொலை வழக்காக மாற்றி மீனாட்சி, சுரேஷ், உடந்தையாக இருந்த வேன் ஓட்டுனர் 21 வயதுடைய மணிகண்டன் மற்றும் பரசுராமன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

4 பேரையும் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த குழந்தை தாமரைச் செல்வனை காவல் துறையினர் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.