1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 12 அக்டோபர் 2016 (20:34 IST)

ஜெ. குணமடைய வேண்டி அதிமுக தொண்டர் தீக்குளிப்பு : சென்னையில் அதிர்ச்சி

ஜெ. குணமடைய வேண்டி அதிமுக தொண்டர் தீக்குளிப்பு : சென்னையில் அதிர்ச்சி

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, விரைவில் குணமடைய வேண்டி அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தாம்பரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை பற்றிய அறிக்கையை அப்பல்லோ நிர்வாகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. தொடர் சிகிச்சை காரணமாக, அவர் எப்போது முழுதாக குணமடைவார் என்று கூற முடியாத நிலையில் மருத்துவர்கள் உள்ளனர். ஆனாலும், அவர் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.
 
ஆனால், அவரது உடல் நிலை பற்றி பரவும் வதந்திகள், அதிமுக தொண்டர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுக தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், வதந்திகளை பொறுத்துக்கொள்ள முடியாத சில தொண்டர்கள் தீக்குளிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் தேதி, விருத்தாசத்தை சேர்ந்த ஒரு அதிமுக தொண்டர் உடலில் தீ வைத்துக் கொண்டார். அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
இந்நிலையில், தாம்பரத்தை அடுத்த மெப்ஸ் சிக்னல் அருகே, இன்று ஒரு அதிமுக தொண்டர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அதன்பின், அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.