Last Updated : வியாழன், 13 ஏப்ரல் 2017 (21:18 IST)
கணவர் தற்கொலை - நடிகை ‘மைனா’ நந்தினி கைது?
தொலைக்காட்சி நடிகை ‘மைனா’ கணவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவருடைய முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சி தொடரில் வெளியான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களுடன் பிரபலமான நடிகை ‘மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திகேயன் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் அவர் பண மோசடி செய்திருந்ததாகவும், தன்னிடம் கூட ரூ.20 லட்சம் வரை அவர் பண மோசடி செய்துள்ளார் எனவும் நந்தினி கூறியிருந்தார். மேலும், வேறு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக எனது கணவரை போலீசார் கைது செய்தனர். இது எனது குடும்பத்தினருக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. எனவே, நான் எனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டேன். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்”என கூறியுள்ளார்.
ஆனால், தன்னுடைய தற்கொலைக்கு நந்தினியின் தந்தை ராஜேந்திரனின் டார்ச்சர்தான் காரணம். நந்தினியிடம் என்னை பேசவிடாமல் அவர் என்னை தடுத்து வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என கார்த்திக் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, இது தொடர்பாக நந்தினி மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் முன் ஜாமீன் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து விட்டார். எனவே, விரைவில் நந்தினியும், அவரது தந்தையும் போலீசாரால் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் முன் ஜாமீன் மனு செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.