முதல்வர் கண் கலங்கியது வேதனையா இருக்கு.. மன்னிசுடுங்க! - மன்னிப்பு கோரிய ஆ.ராசா!
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் குறித்து தான் பேசியதற்கு ஆ.ராசா வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பிரச்சாரம் ஒன்றில் திமுக எம்.பி ஆ.ராசா முதல்வர் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக திமுகவினரே ஆ.ராசா செயலுக்கு அதிருப்தி தெரிவித்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரத்தில் பேசியபோது தன் தாய் குறித்து ஆ.ராசா இழிவாக பேசியதாக கண்கலங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ஆ.ராசா “எனது பேச்சை சுட்டிக்காட்டி முதல்வர் கண்கலங்கிய செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். நான் பேசியது திரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என கூறியிருந்தேன். எனினும் எனது பேச்சால் முதல்வர் உள்ளபடியே காயம்பட்டிருந்தால் முதல்வர் பழனிசாமியிடம் மனம் திறந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.