வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 21 மே 2024 (13:14 IST)

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

Anbumani Stalin
சென்னை கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையம் இருந்த இடத்தில் பசுமைப் பூங்கா  அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். 
 
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னைகோயம்பேட்டில் இயங்கிவந்த புறநகர்ப் பேருந்து நிலையம் வண்டலூர் – கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பெரிய பசுமைப் பூங்காவைப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். மாறாக வணிக வளாகம், திரையரங்குகள்,அடுக்குமாடிக் குடியிருப்பு, ஐ.டி பார்க் போன்ற எதையும் அமைக்கக் கூடாது. சென்னை மக்களை அச்சுறுத்தும் தொற்றா நோய்ப் பேராபத்து(Non-communicable diseases – NCDs), வெள்ளச் சேதம், நகர்ப்புற வெப்பத்தீவு(Urban Heat Island – UHI), நீர்ப்பற்றாக்குறை உள்ளிட்ட பல சிக்கல்களுக்குத் தீர்வாக கோயம்பேடு பசுமைப் பூங்கா அமையும்.
 
கோயம்பேடு, அரும்பாக்கம், திருமங்கலம், முகப்பேர், விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். மேலும், மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்து வசதிகளுடன் கோயம்பேடு இணைக்கப்பட்டுள்ளதால் அதிக தொலைவில் உள்ள மக்களுக்கும் பயனாக இருக்கும். இந்தியாவிலும் உலகெங்கிலும் முன்னணி நகரங்கள் மிகப்பெரிய பொதுப் பூங்காக்களைக் கொண்டுள்ளன. 
 
அதுபோன்ற நல்வாய்ப்பு சென்னையில் இல்லை. பெங்களூரின் லால்பாக் தோட்டம் 240 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. புதுதில்லியின் மெக்ராலி பூங்கா 200 ஏக்கரிலும், லோதி பூங்கா 90 ஏக்கரிலும் அமைந்துள்ளன. இந்த நகரங்களில் மேலும் பல பெரிய பூங்காக்கள் உள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா புதுதில்லியின் பதர்பூர் பகுதியில் 880 ஏக்கர் பரப்பளவில் 450 கோடி ரூபாய் செலவில் இப்போது அமைக்கப்படுகிறது.

நியூயார்க் நகரின் புகழ்பெற்ற சென்ட்ரல் பூங்கா 843 ஏக்கரிலும், லண்டன் நகரின் புகழ்பெற்ற ஹைட் பூங்கா 350 ஏக்கரிலும் அமைந்துள்ளன. உலக நகரங்களுடன் ஒப்பிடும் அளவில் பலநூறு ஏக்கர் பரப்பளவில் பொதுமக்களுக்கான பூங்காக்கள் சென்னை நகரில் அமைந்திருக்கவில்லை. சென்னை பூங்காக்களில் 20 ஏக்கர் பரப்பிலான செம்மொழிப் பூங்கா மற்றும் 15 ஏக்கர் பரப்பிலான அண்ணாநகர் கோபுரம் பூங்கா ஆகியன மட்டுமே பொது மக்கள் முழு அளவில் பயன்படுத்தத்தக்க பெரிய பூங்காக்கள் ஆகும்.
 
மாநகரின் 30% முதல் 40% பரப்பளவைப் பசுமைப் பகுதியாகமாற்றுவோம், சென்னை நகர மக்களில் 70% பேருக்கு, 15 நிமிட நேரத் தொலைவுக்குள், நகர்ப்புறப் பூங்காவை நடந்து அடையும் வாய்ப்பினை, 2030ஆம் ஆண்டுக்குள் கிடைக்கச் செய்வோம் எனும் வாக்குறுதியை சென்னை மாநகராட்சி அளித்துள்ளது. இக்கோரிக்கையை முன்வைக்கும் சி40 நகர்ப்புற இயற்கைப் பிரகடனம்(C40 Urban Nature Declaration)எனும் பன்னாட்டு பிரகடனத்தை 2021ஆம்ஆண்டில்சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. சென்னை மாநகராட்சியின்,சென்னைக் காலநிலைச் செயல்திட்டதை(Chennai Climate Action Plan) 2023 ஜூன் மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்தச் செயல்திட்டத்தில் சென்னை மாநகரின் பசுமைப் பொதுவெளியை அதிகரிப்போம் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் தனிநபர் பொதுவெளிப் பரப்பளவை 2030, 2040,2050ஆம் ஆண்டுகளுக்குள் முறையே 25%,33%, 40% அதிகமாக்குவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்ந்த லட்சியங்கள் வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல், உண்மையாகவே நிறைவேற்றப்பட வேண்டும்.
 
சென்னைப் பெருநகரில் புதிய பூங்காக்கள் உருவாக்குவதற்குப் போதுமான இடம் இல்லாத நிலையில், 36 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையமும், 6.8 ஏக்கர் பரப்பளவில் உள்ள புறநகரத் தனியார்ப் பேருந்து நிலையமும் இடம் மாற்றப்பட்டுள்ளது ஒரு நல்வாய்ப்பு ஆகும். இவற்றில் மொத்தமுள்ள 42.8 ஏக்கர் நிலத்தில், மாநகரப் பேருந்து நிலையத்திற்கான சுமார் 5 ஏக்கர் போக மீதமுள்ள பகுதியைப் புதிய பூங்காவாக உருவாக்க வேண்டும்.
 
இதன் மூலம், சுமார் 50 முதல் 60 ஏக்கர் அளவிலான பரப்பில் ஒரு பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும். இதன்முலம், கடந்த 60 ஆண்டுகளில், சென்னையில் இருந்த ஏராளமான நீர்நிலைகளும் பசுமைப் பகுதிகளும் அழிக்கப்பட்டதுதான் வரலாறு என்பதை மாற்றி, ஒரு பெரிய பசுமைப் பூங்காவைப் புதிதாக அமைக்கும் சாதனையை தமிழ்நாடு அரசு படைக்க முடியும். கூடவே, சென்னை மாநகரின் பிராண்ட் மதிப்பை உயர்த்தும் ஒரு மிகச்சிறந்த அடையாளமாகவும் இது இருக்கும்.

எனவே, சென்னைப் பெருநகரில் பூங்காக்கள் உள்ளிட்ட பொதுவெளிகள் குறைந்து வரும் நிலைமையைமாற்றவும், பெருகிவரும் தொற்றா நோய்ப் பேராபத்தை எதிர்கொள்ளவும், சென்னையின் சுற்றுச்சூழலையும்உயிரிப்பன்மயத்தையும்காக்கவும், நீர்வளத்தை மேம்படுத்தவும்,வெப்ப அலையை சமாளிக்கவும், வெள்ள பாதிப்பை குறைக்கவும் – கோயம்பேடு வெளியூர்ப் பேருந்து நிலையப் பகுதிகளில் புதிய பூங்காவை அமைக்க வேண்டும்.
 
அதற்கான அறிவிப்பினை தமிழ்நாடுஅரசுஉடனடியாக வெளியிட வேண்டும். மேலும், பொதுமக்களின் நடைப்பயிற்சிக்கும் உடலுழைப்புக்கும் உதவும் வகையிலுல் பாதுகாப்பானதாகவும், அனைவருக்குமானதாகவும், கட்டணமில்லாததாகவும், பசுமையானதாகவும் இப்பூங்காவை அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கூடவே, சென்னை மாநகரில் உயிரிப்பன்மயத்தைக் காப்பாற்றும் வகையிலும், மக்களின் உடல்நலத்தை மேம்படுத்தும் நோக்கிலும்,சென்னை உயிரிப்பன்மய செயல்திட்டம் (Chennai Biodiversity Action Plan) மற்றும் சென்னை பொதுவெளிகள் செயல் திட்டம் (Chennai Public Spaces Action Plan)ஆகிய புதிய செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும்.
 
தமிழ்நாடு மாநில பசுமைக் குழு ஏற்கெனவே தயாரித்துள்ளமரங்கள் சட்ட(Trees Act)முன்வரைவை சட்டமாக நிறைவேற்ற வேண்டும். அதனடிப்படையில் மரங்கள் ஆணையத்தை(Tree Authority)உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாடு மற்றும் சென்னையின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். வாழத்தகுந்த, செழிப்பான, சிறந்ததொரு சென்னை மாநகரை உருவாக்க துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் கடிதத்துடன் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் பசுமைத் தாயகம் அமைப்பின் விரிவான அறிக்கை ஒன்றினை இணைத்துள்ளேன். நிலம், நீர், காற்று, சுற்றுச்சூழலை காக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொண்டு அனைவருக்கும் வளமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் என நம்புகிறேன் என்று தனது கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.