1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 4 நவம்பர் 2020 (12:26 IST)

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பரபரப்பான அரசியல் செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி தற்போது திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வேல்யாத்திரை ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. நவம்பர் 6ஆம் தேதி தொடங்கும் இந்த யாத்திரை சரியாக ஒரு மாதம் கழித்து டிசம்பர் 6 இல் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரையில் மத்திய அமைச்சர்களும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வேல் யாத்திரையை தடைசெய்ய வேண்டுமென தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன
 
இதனை அடுத்து தற்போது இந்த வேல் யாத்திரைக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த முறையீட்டில் வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது 
 
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதும், நாளை இந்த மனு விசாரணைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் இந்த விசாரணையில் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்