வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (16:42 IST)

உயிரிழந்த தமிழக மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரிய வழக்கு.! மத்திய - மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு..!!

Madurai Court
இலங்கை கடற்படையினரால் உயிரிழந்த தமிழக மீனவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த ஜூலை 31ஆம் தேதி ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான படகில் மூக்கையா, முத்து முனியன், மலைச்சாமி, ராமச்சந்திரன் ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிப்பதற்காக சென்றனர். 

அன்றைய தினம் இலங்கை கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. இதனால் கோபத்தில் இருந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை தாக்கியதில் மலைச்சாமி உயிரிழந்தார். ஒருவர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. மீதி உள்ள இருவரும் கைது செய்யப்பட்டு இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியிலும் இலங்கை அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. 
 
அப்போதும் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் படகை பறிமுதல் செய்ததோடு, விக்டஸ், மாரிமுத்து, ஜான்பால், அந்தோணி ராஜ் உள்ளிட்ட மீனவர்களை சித்திரவதை செய்து கொலை செய்தனர். ஒவ்வொரு முறையும் இந்நிகழ்வு நடைபெற்றாலும், மத்திய, மாநில அரசுகள் பராமுகமாகவே உள்ளன. இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.  ஆகவே இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு, வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.