வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (13:23 IST)

சிலை கடத்தலில் 4 தொழிலதிபர் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கு தொடர்பு?

சிலை கடத்தலில் 4 தொழிலதிபர் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து, அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
 

 
சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையில் உள்ள தொழிலதிபர் தீனதயாளன் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை 49 ஐம்பொன் சிலைகள் உட்பட மொத்தம் 285 சிலைகள் கைப்பற்றப்பட்டன. 96 ஓவியங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
 
இது தொடர்பாக கடந்த 4ஆம் தேதி சரணடைந்த தீனதயாளனிடம் காவல் துறையினர் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்களில் திருடிய சிலைகளை சென்னைக்கு கடத்தி கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்பட்ட தனியார் கொரியர் நிறுவனத்தையும் காவல் துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
 
இதற்கிடையே விசாரணையில் சென்னையில் மேலும் சில இடங்களில் தீனதயாளன் சிலைகளை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக தீனதயாளன் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
 
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சிலைகளை கடத்துவதற்கு அவருக்கு காவல் துறை, சுங்கம், இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சில அதிகாரிகள் உதவியிருப்பது காவல் துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
 
இதையடுத்து அந்த அரசு அதிகாரிகளின் பட்டியலை தயாரித்துள்ளனர். இதில் பலர் ஓய்வு பெற்று விட்டனர். அவர்களிடம் விசாரணை செய்யவும் முடிவு செய்துள்ளனர். மேலும் 4 தொழில் அதிபர்களும் உடந்தையாக இருப்பது தெரிய வந்துள்ளது.