1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (23:12 IST)

3 இளம்பெண்கள் மரணம், 3 பேர் பாலியல் வன்கொடுமை' - இலங்கை காவல்துறை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், மர்மமான முறையில் தீ காயங்களுடன் உயிரிழந்த சிறுமி தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 40 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி போலீஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
 
இதேவேளை, ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2009ம் ஆண்டு முதல் இதுவரையான காலம் வரை 11 யுவதிகள் பணிப் பெண்களாக கடமையாற்றியுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
இந்த அனைத்து பணிப் பெண்களும், ஒரே இடைத்தரகரின் மூலம் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளமையும் விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாக அஜித் ரோஹண கூறுகின்றார்.
 
இவ்வாறு பணியாற்றிய 11 பேரில், மூவர் வெவ்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
இவர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், மற்றைய யுவதி புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
 
காதலனுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக யுவதியொருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், மற்றுமொரு பெண் நோய் ஒன்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் ரிஷாட் பதியுதீனின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.ஜே.எம்.பாயிஸ் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் மர்மமான முறையில் தீ காயங்களுடன் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் பொய்யான விடயங்களை பரப்பி, குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள சிலர் முயற்சித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.
 
மூன்றாவதாக இறந்த சிறுமி, மர்மமான முறையில் தீ காயங்களுடன் உயிரிழந்துள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
 
இலங்கை முன்னாள் அமைச்சர் வீட்டில் இறந்த சிறுமியின் உடல் தோண்டி எடுப்பு
"சினிமா துறையினர், அரசியல்வாதிகள் உள்பட 139 பேர் பாலியல் வல்லுறவு செய்தார்கள்"
இந்த நிலையில், ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய எஞ்சிய 8 பேரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
 
இதேவேளை, ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மூன்று யுவதிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 
தீ காயங்களுடன் அண்மையில் உயிரிழந்த சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை, முதலாவது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
 
அதேபோன்று, ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரனினால், தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட 22 வயதான யுவதியொருவர் தெரிவித்திருந்தார்.
 
 
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரன் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 9ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மற்றுமொரு யுவதியிடம் போலீஸார் நேற்று (01) வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
 
கொழும்பு - பொரள்ளை - பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள ரிஷாட் பதியுதீனின் வீpட்டில் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் தானும், முன்னாள் அமைச்சரின் மனைவியின் சகோதரனினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக நேற்யை தினம் வாக்குமூலம் வழங்கிய யுவதி தெரிவித்துள்ளார்.
 
இந்த யுவதியினால் குற்றஞ்சுமத்தப்படும் சந்தேகநபர், இதேபோன்றதொரு மற்றுமொரு குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
 
காமப் பிசாசு : 136 பாலியல் வல்லுறவு குற்றத்துக்கு தண்டனை பெற்ற சினாகா  
'பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற' நபரின் ஆண்குறியை வெட்டிய பெண்
இந்த நிலையில், மூன்று யுவதிகள் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
 
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மூன்று யுவதிகள் உயிரிழந்துள்ளதுடன், மூன்று யுவதிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 
இதேவேளை, ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில், கடந்த 3ம் தேதி தீ காயங்களுடன் மர்மமான முறையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, கடந்த 15ம் தேதி உயிரிழந்திருநதார்.
 
இவ்வாறான நிலையில், சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நிறைவு செய்து, சடலம் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலம் கடந்த 30ம் தேதி தோண்டி எடுக்கப்பட்டது.
 
தோண்டி எடுக்கப்பட்ட சடலம் பேராதனை போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மூவர் அடங்கிய விசேட மருதுத்துவ குழாமினால் 31ம் தேதி இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
 
இலங்கை முன்னாள் அமைச்சர் வீட்டில் இறந்த சிறுமி: தோண்டி எடுக்கப்பட்ட உடல்
 
முதற்கட்டமாக சடலம் மீது சி.டி ஸ்கேன் நடத்தப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
 
உடலில் உள்ளக காயங்கள் அல்லது எலும்பு முறிவு காணப்படுகின்றனவா என்பதை கண்டறிவதற்காகவே, சி.டி ஸ்கேன் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
அதனைத் தொடர்ந்தும், சந்தேகிக்கப்படும் சிறுமியின் உடல் பாகங்களின் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவை ஆய்வு கூட பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
 
ஆய்வு கூட அறிக்கைகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து, சடலம் மீதான இரண்டாம் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தயாரிக்கபபட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
 
ரிஷாட் பதியுதீனின் கட்சி அறிக்கை
 
ரிஷாட் பதியூதீன் தொடர்பில் வெளிவரும் தகவல்களை தெளிவூட்டும் வகையில் ரிஷாட் பதியுதீனின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.ஜே.எம். பாயிஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
 
டயகம பகுதியிலிருந்து 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி இறந்த சிறுமி தரகரொருவரின் மூலம் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், அவரை அனைவரும் இசானி என்றே அழைத்துள்ளதாகவும்தாக்க அவர் கூறியுள்ளார்.
 
18 வயது பூர்த்தியாகியதாக தெரிவித்தே, அவர் வேலைக்கு சேர்க்கப்பட்டதாக கூறியுள்ள அவர், தீ காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதன் பின்னரே, அவரது பிறந்த தேதி உறுதிப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.
 
இவர் வேலைக்கு அமர்த்தப்படும் போது, அவருக்கு 16 வருடங்களும், 6 நாட்களும் என்பது உறுதியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அவரை இன்றும் சிலர் சிறுமி என அடையாளப்படுத்தி, குற்றஞ்சுமத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
உயிரிழந்த சிறுமி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு வருகைத் தரும் போது, ரிஷாட் பதியுதீன் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும், தீ காயங்கள் ஏற்பட்ட தருணத்திலும் ரிஷாட் பதியுதீன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுப்பு காவலில் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
அத்துடன், தமது வீட்டு உறவினர்களுடன் உரையாடுவதற்கு அனைத்து தருணங்களிலும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக கூறியுள்ள ஏ.ஜே.எம்.பாயிஸ், அது தொலைபேசி அறிக்கையின் ஊடாக உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
அதேபோன்று, அந்த சிறுமி தங்குவதற்கு, ரிஷாட் பதியுதீனின் மனைவியினால் அனைத்து வசதிகளும், எந்தவித குறைபாடுகளும் இன்றி செய்துக்கொடுக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
மேலும், ஹிஷாலினி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிற்கு வருகை தருவதற்கு முன்னரே, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை, பிரேத பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளதாக பாயிஸ் குறிப்பிடுகின்றார்.
 
குறித்த வீட்டில், சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதற்கான எந்தவொரு பின்புலமும் இருக்கவில்லை என கூறியுள்ள அவர், அவ்வாறு இடம்பெற்றிருப்பின் அது தொடர்பில் மரபணு பரிசோதனை மூலம் தகவல் வெளியாகி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, வீட்டில் ஏற்கனவே இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக போலீஸார் வெளியிட்ட தகவல் குறித்தும், பாயிஸ் தனது அறிக்கையில் தெளிவூட்டியுள்ளார்.
 
காதலனுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக யுவதியொருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும், மற்றுமொரு பெண் நோய் ஒன்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அரசியல் பயணத்தை தடுப்பதற்கும், அவரது நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்துவதற்கும் சதியொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.ஜே.எம்.பாயிஸ் தெரிவித்துள்ளார்.
 
யுவதிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் விசாரணை
சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் அதேவேளை, ரிஷாட் பதியுதீனின் வீட்டில் யுவதிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
 
சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் இடைதரகர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
அத்துடன், ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரனும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
இதேவேளை, சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கோரி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.