1,024 கிலோ கெட்டுப்போன இறைச்சி...206 கடைகளுக்கு நோட்டீஸ் - உணவு பாதுகாப்புத்துறை
நாமக்கல் பகுதியில் உள்ள பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் 14 வயது சிறுமி சவர்மா சாப்பிட்ட நிலையில் அவர் திடீரென வாந்தி மயக்கம் எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு நடத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 1024 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்,
பறிமுதல் செயப்பட்ட 1024 கிலோ கெட்டுப்போன சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட இறைச்சி ஆகியவற்றை கிருமி நாசினி மூலம் அழித்துள்ளனர்.
இதுதொடர்பாக 115கடைகளுக்கு ரூ.1.61 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் 206 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.