செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்டு வெற்றி பெற்ற அம்பாள்

சக்திக்கு உகந்த ஒன்பது ராத்திரிகள் நவராத்திரி. அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும் தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது அதில் முக்கியத்துவம் பெறுகிறது.

 
 
புரட்டாசி மாதத்தின் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி  அன்று விஜயதசமி விழாவாகும்.
 
மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார் என்கின்றன புராணங்கள். இதனை கொண்டாடும் விதமாக வீடுகளில் கொலுவைத்து 10 நாட்கள் தொடர்ச்சியாக அம்மனுக்கு வழிபாடு  நடத்தப்படுகிறது.
 
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள இந்து மக்கள் மற்றும் உலகில்  உள்ள இந்து மக்கள் ஆகியோரால் எங்கும் நவராத்திரி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.
 
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களில் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது. இதன் தத்துவம் தாமச குணம், ரஜோ குணம், சத்துவ குணம்  ஆகிய மூன்று குணங்களையும் குறிக்கும். முதல் இரண்டு குணங்களைக் கடந்து சத்துவ குணத்தை அடையும் வழியையே இந்த  நவராத்திரி கொலுப்படிகள் நமக்கு உணர்த்துகின்றன.
 
நவராத்திரி விரதத்தை மேற்கொண்டால் தாங்கள் விரும்பிய பலனை அடையலாம் என்றும் கூறுகிறார்கள். இவ்விரதத்தை இருப்பவர்கள் வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்று பலன்களையும் அடைவார்கள். இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக இந்திரன், விருத்திராசுரனை அழித்தார் என்று புராணம் கூறுகிறது.