வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

நவராத்திரியின் விசேஷம் பராசக்தி, மஹாலஷ்மி, சரஸ்வதி வழிபாடு

நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லஷ்மி, துர்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரத்தின் நோக்கமாகும். 

 
முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலஷ்மியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை  ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். 
 
நவராத்திரி பூஜையை ஆனந்தமான கொண்டாட்டமாக கொள்வர். தூய்மையுடனும் அழகுப் பொலிவுடனும் திகழும் கொழுமண்டபத்தை அமைத்து அங்கு பூர்வாங்க பூஜைகளுடனும், சங்கல்ப பூர்வமாகவும் முறைப்படி கும்பத்தை ஸ்தாபிக்க  வேண்டும்.  
 
வீடுகளில் கொலுவைத்தல் நவராத்திரியின் விசேஷ அம்சமாகும். படிப்படியாக அமைக்கப்பட்ட விசேஷமான பீடங்களில்  அல்லது மாடிப்படிகளில் விதவிதமான பொம்மைகள் வைத்து இக்கொலு அலங்கரிக்கப்படுகிறது. 5, 7 என்ற ஒற்றைப்படையாகப்  படிகளின் எண்ணிக்கையை வைத்து கொலு அமைக்கப்படுகிறது. அருகிலேயே கும்பம் வைத்து சுவாமிப்படங்களையும் மாட்டி  அணையா விளக்குகள் ஏற்றி ஒன்பது நாட்களும் விதவிதமான பட்சணங்களை நைவேந்தியம் செய்து பூஜிப்பது முறை. 
 
சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில்  அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர். 
 
நவராத்திரியின் ஒன்பதாம் நாளாகிய மஹாநவமியன்று சரஸ்வி பூஜை அல்லது கலைமகள் விழா அல்லது ஆயுத பூஜை என்றும் சிறப்பாக கூறுவர். புத்தகங்கள் சரஸ்வதி தேவியின் உறைவிடம், கலைப் பொருட்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள் முதலிய ஆயுதங்களுக்கும் அதிபதி அவளே. அதனால் மஹாநவமி அதாவது 9வது நாள் இவற்றை பூஜையில்  வைத்து வழிபடுவர். அது மட்டுமல்லாமல் அத்தினத்தில் அவற்றை பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.