புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (14:43 IST)

உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்து கொள்வதால் உடல் எடை குறையுமா...?

கொள்ளில் புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து, மாவுசத்து, தாதுபொருள்கள், வைட்டமின்கள் போன்றவை மிகுதியாக நிறைந்துள்ளது. மேலும் எண்ணற்ற நுண்சத்துகளையும் கொள்ளு தன்னகத்தே கொண்டுள்ளது.

உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.
 
கொள்ளை நாம் தொடர்ந்து எடுத்து கொண்டால் நம் ரத்த அழுத்தம் சீரான அழுத்தத்தில் இருக்கும். மேலும் சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும். ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடுமையான உடல் உழைப்பிற்க்கு பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் குறைக்கும்.
 
கொள்ளுப் பருப்பை நீரில் ஊற வைத்து, அந்த நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம், வறுத்தும் சாப்பிடலாம்.
 
கொள்ளை நீரில் கொதிக்க வைத்து அந்நீரை அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்கள் பலப்படும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணில் ஏற்படும் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்,  மாதவிலக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும், அரிசியும் சேர்த்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
 
குழந்தைகளுக்கு மழை காலங்களில் சளி பிடித்து இருக்கும்போது கொள்ளு சூப் செய்து கொடுத்தால் சளி பிரச்சனை உடனடியாக குணமாகும். குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்களும் கொள்ளு சூப் குடிக்கலாம். 
 
கொள்ளை அரைத்து பொடி செய்து, ரசத்தில் பயன்படுத்தி வரலாம். சிலருக்கு வாயு பிரச்சனையால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். அவர்கள் கொள்ளை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி ஏற்படும்.