வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்ற உதவும் சுண்டைக்காய்....!
சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது. இவை மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.
பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும். சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல், காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.