வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

முளைகட்டிய தானியங்களில் உள்ள ஆரோக்கிய பலன்கள்...!

முளைகட்டிய தானியங்கள் நல்ல ஆரோக்கிய பலன்களைத் தருகின்றன எனவும் மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் ஆன்டி ஆக்சிடென்டுகளையும் கொண்டிருப்பதாகவும் முடிவுகள் கூறுகின்றன.
தானியங்கள், பயறு வகைகளை நாம் பெரும்பாலும் சமைத்தே சாப்பிடுகிறோம். அப்படிச் சாப்பிடாமல் முளைகட்டிச் சாப்பிட்டால் நிறைய சத்துகளைப் பெறலாம். குறிப்பாக உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின் சி உயிர்ச்சத்து அதிக அளவில் கிடைக்கும்.  முளைகட்டிய பயறுகள், தானியங்கள் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
முளைவிட்ட கொண்டைக்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இரும்பு, புரதம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்டைக்கடலையில் உள்ளன. 
 
சிறுதானியமான கம்பை முளைகட்டிச் சாப்பிட்டால் உடலுக்குபலம் தரும். சத்துக்குறைபாடு உள்ளவர்கள் தினமும் கம்புப்பயறு சாப்பிட்டு  வந்தால் உடல் உறுதியாகும். இது உடல் சூட்டைக் குறைக்கும். வயிற்றுப்புண், மலச்சிக்கல் பிரச்சனைகளைச் சரிசெய்யும். இதயத்தை  வலுவாக்கும் நரம்புகளுக்கு புத்துணர்வு தரும் இரத்தத்தைச் சுத்திகரிக்கும்.
 
முளைகட்டிய வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. வெந்தயத்தில்  உள்ள மூலக்கூறுகளால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். அதனால் இது, சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம், கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துகொள்ளும். தொப்பை, உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவது நல்லது.
 
கொள்ளுப்பயறை முளைகட்டிச் சாப்பிட்டால் வைட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துகள் கிடைக்கும். இது கொலஸ்ட்ரால், தொப்பை, உடல் பருமன்  போன்றவற்றைச் சரிசெய்ய உதவும். நரம்பு, எலும்புக்கு ஊட்டமளிக்கும். மூட்டுவலியால் அவதிப்படுவர்கள் முளைகட்டிய கொள்ளுப்பயறைச்  சாப்பிடுவது நல்லது.
 
உளுந்தை முளைக்கட்டி சாப்பிட்டால் மூட்டுவலியைப் போக்கும். சர்க்கரை நோயாளிகளும் முளைகட்டிய உளுந்தை சாப்பிடுவது நல்லது.  தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும்.
 
முளைகட்டிய பச்சைப் பயறைச் (பாசிப்பயறு) சாப்பிட்டால், அதிகப் புரதம், கால்சியம் சத்து கிடைக்கும். இது வளரும் குழந்தைகளுக்கு ஊட்டம் தரும் உணவு. அல்சரைக் குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தி தரும்.