புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அற்புத மருத்துவ பயன்கள் நிறைந்த நெருஞ்சில்...!!

நெருஞ்சில் முழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்; சிறுநீர் பெருக்கும்; காமம்  பெருக்கும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; ஆண்மையைப் பெருக்கும்; இரத்தைப்போக்கை கட்டுப்படுத்தும்.
நெருஞ்சில் கனிகளில், நிலைத்த எண்ணெய், பிசின்கள் மற்றும் நைட்ரேட் உப்புகள் காணப்படுகின்றன. நெருஞ்சில் விதைகள், சிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு ஆகியவற்றைக் குணமாக்கும்.
 
சிறு நெருஞ்சில், திரிகண்டம், கோகண்டம் போன்ற மாற்றும் பெயர்களும் நெருஞ்சில் தாவரத்திற்கு உண்டு. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.  நெருஞ்சில் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
 
நெருஞ்சில் 50 கிராம் அளவிற்கு சுத்தம் செய்து எடுத்துக்கொண்டு, 500 மி.லி. நீரில் போட்டு, பாதியாகச் சுண்டக்காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொண்டு 25 மி.லி. வீதம்  2 மணி நேரத்திற்கு ஒரு முறை குடிக்க சிறுநீர்க் கடுப்பு குணமாகும்.
 
நெருஞ்சில் சூரணம் 1/2 கிராம் முதல் 1 கிராம், 1 டம்ளர் மோரில் கலந்து, தினமும் இரண்டு வேளைகள் குடித்துவர வெள்ளைப்படுதல் குணமாகும்.
 
நெருஞ்சில் முழுத்தாவரத்தையும் இடித்துப் பிழிந்த சாறு 50 மி.லி.யுடன், 1 டம்ளர் மோர் கலந்து குடிக்க சிறுநீருடன் இரத்தம் வருதல் கட்டுப்படும்.
 
நெருஞ்சில் விதைகளைப் பாலில் அவித்து, காயவைத்து, தூள் செய்து வைத்துக்கொண்டு, காலை, மாலை 1 1/2 தேக்கரண்டி அளவு பாலில் கலந்து குடித்துவர  ஆண்மை பெருகும்.
 
நெருஞ்சில் செடி 2, அருகம்புல் ஒரு கைப்பிடி, ஒரு லிட்டர் நீரில் நசுக்கிப்போட்டு, கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி, 50 மி.லி. அளவு, காலை, மதியம், மாலை வேளைகளில் 3 நாட்கள் வரை குடிக்க உடல் சூட்டால் ஏற்படும் கண்எரிச்சல். கண்ணில் நீர் வடிதல் குணமாகும்.