வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருத்துவகுணம் கொண்ட சுண்டைக்காய்...!

சுண்டைக்காயை சாப்பிட்டால் உடற்சோர்வு நீங்கும். இதை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம். பிரசவமான பெண்களுக்கு பத்திய  சாப்பாட்டின் ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமாக சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான்.

சுண்டைக்காயானது தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது. வாயுப் பிடிப்பு பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு சுண்டைக்காய் நல்ல மருந்து.
 
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்க அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இவை வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பத்தோடு உடலின்  நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
 
வயிற்று பிரச்சனையால் அவதிபடுபவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
 
சுண்டக்காயனது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. அது ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தவிர்க்கும் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள்  கொண்டது.
 
சுண்டக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. கேழ்வரகு, கீரை போன்றவற்றை விட அதிக இரும்பு சத்து கொண்டது.
 
காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து காய்ச்சலை குறைப்பதுடன், உடலில் உள்ள காயங்களையும், புண்களையும் ஆற வைக்கும்.
 
சுண்டையில் உள்ள தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்துக்கு அபரிதமான சக்தியை கொடுக்கக்கூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும் இது உதவும்.