புதன், 4 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கடுமையான சிறுநீரக வலி நீங்கிட ஒரு அற்புத மூலிகை தேநீர்!

சிறுநீரகத்தில் கல் உண்டாகி விட்டால், அது மிகப் பெரிய வேதனையை ஏற்படுத்தி, நம்மை முடக்கி விடும் தன்மை கொண்டது. சிறுநீரகப் பாதையில் உருவான கற்களின் இயக்கத்தால், அதிக வலியினை ஏற்படுத்தி, என்ன செய்கிறோம் என்று உணர முடியாத நிலையில், உறக்கத்தில் இருப்போர், படுக்கையில் இருந்து தரையில் விழுந்து புரளும் நிலையை ஏற்படுத்தி விடும்.  அத்தகைய வலியும் வேதனையும் தான் சிறுநீரகக் கற்களின் கடுமையான விளைவுகள்.

 
 
பொதுவாக, சிலருக்கு சிறிய அளவிலான கற்கள், சிறுநீரின் வழியே வெளியேறி விடும், அந்த சமயத்திலும் வலி கடுமையாக  இருக்கும். சிலருக்கோ, கற்கள் சிறு நீரகப் பாதையில் அடைத்துக்கொண்டு, சிறுநீர் கழிக்க முடியாமல் அளவு கடந்த வேதனையை உண்டு பண்ணி விடும்.
 
எதனால் உண்டாகிறது சிறுநீரகக் கற்கள்? 
 
சிலருக்கு பரம்பரைக் கோளாறுகள் காரணமாக ஏற்படுகிறது. சிலருக்கு ஒருவகை தைராய்டு சுரப்பிகளின் அதீத சுரப்பினால், கற்கள் உண்டாகின்றன. அதிகப் படியாக உடலில் சேரும் கால்சியம் மற்றும் யூரிக் அமில உப்புகளால், சிலருக்கு சிறுநீரகத்தில்  சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன.
 
சிறுநீரகக் கோளாறு அறிகுறிகள்: 
 
அடி வயிற்றில் அவ்வப்போது ஏற்படும் வலி, முதுகில் திடீரென ஏற்படும் வலி, இடுப்பின் முன் பக்க வலி அல்லது சிறுநீர் இரத்தம் கலந்து வெளியேறுதல் இவற்றின் மூலம், சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகி இருப்பதாக அறியலாம். 
 
மூலிகை:
 
சிறுநீரகக் கோளாறுகளை, எல்லாம் அரிய முறையில் சரிசெய்யும் ஒரு எளிய மூலிகை "யானை வணங்கி" என அழைக்கப்படும்  பெரு நெருஞ்சில். நெருஞ்சில் செடிகளை நாம் சர்வ சாதாரணமாக வயல் வெளிகளில், கிராமங்களின் தெருக்களில், நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் அதிகம் கண்டிருப்போம், ஆயினும், காலில் குத்தினால் அதிக வலி தரும். சிறு நெருஞ்சில், குறு நெருஞ்சில் மற்றும் பெரு நெருஞ்சில் என மூன்று வகைகளில் காணப்படும்.
 
நெருஞ்சிலில் "யானை வணங்கி" என அழைக்கப் படும் பெரு நெருஞ்சிலே, சிறுநீரக நோய்களுக்கு வலி நிவாரணியாக, சிறுநீரக  நோய்கள் போக்கும் அரு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது. சூரியனின் திசையை நோக்கித் திரும்பும் மஞ்சள் நிற மலர்களைக் கொண்ட சிறு செடி வகையினைச் சேர்ந்த பெரு நெருஞ்சிலின் இலைகள் மற்ற வகை நெருஞ்சில் இலைகளை விட சற்றே  பெரியதாகவும் மற்றும் இவற்றின் காய்கள், விரலின் நுனியளவில் சற்று அதிகரித்த அளவிலும் காணப்படும். 
 
பயன்படுத்தும் முறை: 
 
இத்தகைய பெரு நெருஞ்சில் செடியை, அவற்றின் வேர்கள் அறுந்து விடாமல், கவனமாக வேர்களுடன் எடுத்துக் கொண்டு,  நன்கு சுத்தம் செய்து இரண்டு லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, ஒரு லிட்டர் நீராக சுருங்கி வரும் போது அதை  சேகரித்து அருந்தி வர, சிறுநீரகக் கற்கள் எல்லாம் நொறுங்கி, துகளாகவோ அல்லது கரைந்தோ சிறுநீரின் வழியே வெளியே  வந்துவிடும்.