1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2024 (12:25 IST)

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

உப்பு நமது உணவை சுவையாக்குகிறது. அது மனித வாழ்க்கைக்கும் இன்றியமையாதது.



 

உடலில் உள்ள நீரின் அளவை பராமரிக்க, உப்பில் இருக்கும் சோடியம் மிகவும் அவசியம். சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் அது உதவுகிறது.

 

பிபிசி உலக சேவையின் 'தி ஃபுட் செயின்' (The Food Chain) என்ற நிகழ்ச்சி, மனித உடலில் உப்பின் முக்கிய பங்கு என்ன என்பது குறித்தும், எவ்வளவு உப்பு உடலுக்கு உகந்தது என்றும் அலசியது.

 

உப்பின் முக்கியத்துவம்
 

“உப்பு வாழ்க்கைக்கு அவசியமானது” என்று ஒரே வாக்கியத்தில் உப்பின் முக்கியத்துவத்தைக் கூறுகிறார், அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் பேராசிரியராக இருக்கும் பால் ப்ரெஸ்லின்.

 

"நமது நியூரான்கள், மூளை, தண்டுவடம், தசைகள் என மின் சமிக்ஞைகள் மூலம் செயல்படும் அனைத்து செல்களுக்கும் உப்பு அவசியமானது. தோல் மற்றும் எலும்புகளிலும் முக்கிய அங்கமாக உப்பு உள்ளது," என்கிறார் அவர்.

 

நமது உடலில் போதிய அளவு சோடியம் இல்லை என்றால் நாம் இறந்து விடுவோம் என்று எச்சரிக்கிறார் பேராசிரியர் ப்ரெஸ்லின்.

 

உடலில் சோடியம் குறைந்தால், குழப்பம், எரிச்சல் ஏற்படலாம், தசைகளின் உணர்திறன் குறையலாம், வாந்தி, வலிப்பு, கோமா ஏற்படலாம்.

 

இரண்டு கிராம் சோடியம் கொண்ட ஐந்து கிராம் உப்பை தினமும் எடுத்துக் கொள்ள உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. இது, கிட்டத்தட்ட ஒரு டீ ஸ்பூன் அளவிலான உப்பு.

 

ஆனால், உலக அளவில் சராசரியாக ஒரு நாளுக்கு 11 கிராம் உப்பு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் இருதய நோய்கள், வயிற்று புற்றுநோய், உடல் பருமன், எலும்பு தேய்மானம், சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

 

அதிக அளவிலான உப்பு எடுத்துக் கொண்டதால் ஒவ்வொரு ஆண்டும் 18.9 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

 

உப்பை அதிகமாக உட்கொள்பவர்கள்

 

நிறைய நாடுகளில், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒளிந்திருக்கும் உப்பின் அளவே, அதிகமான உப்பு உட்கொள்ளுதலுக்கு காரணமாக அமைகிறது.

 

ஆனால், சில நேரங்களில் வரலாற்று காரணங்களும் இருக்கலாம். கசகஸ்தானில் இருக்கும் மக்கள் ஒரு நாளுக்கு 17 கிராம் உப்பு எடுத்துக் கொள்கின்றனர். இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

 

மரியம், கசகஸ்தானின் தலைநகர் அஸ்தானாவில் வசிக்கிறார்.

 

“இதற்கு காரணம் எங்கள் பாரம்பரியம்” என்கிறார். “பல நூற்றாண்டுகளாக, நாங்கள் நிறைய இறைச்சியை சுமந்து கொண்டு மேய்ச்சல் நிலங்களில் அலைந்து கொண்டிருந்தோம். அந்த இறைச்சியை பதப்படுத்த உப்பு தேவைப்பட்டது.”

 

“குளிர்காலத்துக்காக உணவை சேகரித்து வைப்பார்கள். ஒரு முழு மாடு, ஆடு அல்லது பாதி குதிரையை கூட பதப்படுத்த வேண்டியிருக்கும்”

 

எட்டு ஆண்டுகளுக்கு முன், மரியத்தின் மகளுக்கு சில உடல் நல பிரச்னைகள் ஏற்பட்டன. சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகமான உணவுகளை குறைத்துக் கொள்ளுமாறு அவரது மருத்துவர் பரிந்துரைத்தார். அவரது குடும்பத்தினர் உடனடியாக உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதை நிறுத்துவிட்டனர்.

 

“அடுத்த நாள், புதிய உணவை சாப்பிட்ட போது மிகவும் அருவருப்பாக இருந்தது. உணவை சாப்பிட்டோம், ஆனால் அது என்ன உணவென்று கூட தெரியவில்லை”

 

ஆனால், அந்த வெறுப்பு வெகு நாட்கள் நீடிக்கவில்லை. சீக்கிரமே உப்பில்லாத உணவை சாப்பிட அவர்கள் பழகிவிட்டனர்.

 

உப்பு உள்ளே நுழைந்தால் உடல் என்ன செய்யும்?
 

நமது எண்ணங்கள் மற்றும் உணர்திறன்களுக்கு அடிப்படையான மின் சமிக்ஞைகளை உப்பு உடலில் செலுத்துகிறது. அதனால் நமது உடலும் மனமும் ஆற்றல் பெறுகின்றன.

 

நாம் உப்பை உட்கொள்ளும் போது, நாக்கில் உள்ள சுவையணுக்கள் மற்றும் தொண்டையில் உள்ள தசைகளால் அவை அடையாளம் காணப்படுகின்றன.

 

“உப்பு நம்முடைய உடல் மற்றும் மனதை மின்னாற்றல் பெறச் செய்கிறது” என்கிறார் பேராசிரியர் ப்ரெஸ்லின்.

 

“உப்பில் உள்ள சோடியம் அயனிகள் எச்சிலில் கரைந்துவிடும்”

 

பிறகு இவை சுவையணுக்களில் நுழைந்து செல்களை இயக்கத் தொடங்கும்.

 

“ஒரு மின் பொறியை உண்டாக்கும்” என்று விளக்குகிறார்.

 

எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்?
 

உப்பின் அளவு காரணமாக உடலில் ஏற்படும் துல்லியமான விளைவுகள், ஒவ்வொருவரது மரபணு அமைப்பை பொருத்தது.

 

உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேலான மக்கள் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உப்பின் அளவை குறைத்துக் கொண்டால், இதனை தடுக்கவும், இதற்கு சிகிச்சை அளிக்கவும் முடியும்.

 

“அதிக அளவிலான உப்பை உட்கொள்ளும் போது, உங்கள் உடல் முதலில் செய்வது, அந்த உப்பை கரைப்பது. உங்கள் உடல் நீரை தக்க வைத்துக் கொள்ளும். எனவே, கூடுதலான திரவத்தைக் கையாளும் போது, உங்கள் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்,” என்று விவரிக்கிறார் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகாசில் பல்கலைகழகத்தின் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறையின் பேராசிரியர் கிளையர் காலின்ஸ்.

 

இதன் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கலாம்.

 

“உங்கள் ரத்த நாளங்கள் பலவீனமாக இருந்தால், உதாரணமாக மூளையில், அவை வெடித்து, அதனால் பக்கவாதம் ஏற்படக் கூடும்” என்கிறார்.

 

பிரிட்டனில், ஒரு நாளில் சராசரியாக எடுத்துக் கொள்ளப்படும் உப்பின் அளவு எட்டு கிராமாக குறைந்துள்ளது. எனினும், இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட இப்போதும் அதிகம். உப்பின் அளவை குறைக்க உணவு தயாரிப்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகவே தினசரி உப்பு உட்கொள்ளும் அளவு குறைந்துள்ளது.

 

ஒவ்வொரு நாட்டிலும், உட்கொள்ள பரிந்துரைக்கப்படும் உப்பின் அளவு மாறுபடும். சிறுநீர் பரிசோதனையில் உங்கள் உடலில் உப்பு அதிகமாக உள்ளதா, குறைவாக உள்ளதா என்பது தெரிய வரும்.

 

நீங்கள் எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கணித்துக் கொள்ள, உங்கள் உணவு உட்கொள்ளுதலை தொடர்ந்து பதிவு செய்து வரலாம், அல்லது உணவுப் பொருள்களின் லேபில்களைப் பார்த்து அதிலுள்ள சோடியம் அளவை கணக்கிடும் செயலியை பயன்படுத்தலாம். இரண்டுமே துல்லியமான முறைகள் அல்ல, எனினும் உப்பின் அளவை ஓரளவு கணித்துக் கொள்ள உதவும் என்கிறார் பேராசிரியர் காலின்ஸ்.

 

உப்பை குறைத்துக் கொள்ள டிப்ஸ்

நீங்கள் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவு அதிகமாக இருந்தால் கூட, அதனை குறைப்பது எளிதானது அல்ல. அஸ்தானாவில், கசகஸ்தானின் தேசிய உணவான பெஷ்மார்க்கை சாப்பிடாமல் தவிர்க்க மரியம் போராடுகிறார். அது பாஸ்தாவுடன் கூடிய வேக வைத்த இறைச்சியாகும். அவரது வயதான பெற்றோர்களும் உப்பில்லாமல் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.

 

ரொட்டி, பாஸ்தா அல்லது வேறு ஏதாவது உப்பு குறைவான உணவை உட்கொள்ளுமாறு பேராசிரியர் காலின்ஸ் வலியுறுத்துகிறார்.

 

“நீங்கள் உணவு சமைக்கும் போது, உப்புக்கு பதிலாக மருத்துவ குணமுள்ள இலைகள் அல்லது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்” என்கிறார்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு