திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (09:04 IST)

அற்புத மருத்துவகுணம் நிறைந்த கீரைகளும் அவற்றின் பயன்களும் !!

கருப்பை கோளாறுகளை துத்திக்கீரை நீக்கும். மூட்டில் தேங்கும் வாயுப் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வருவது முடக்கற்றான். சிறுநீர் நன்றாக வெளியேற முள்ளங்கிகீரை உகந்தது.


வறட்டு இருமலுக்கு தூதுவளை சிறந்த மருந்து. இதைத் துவையலாகச் செய்து சாப்பிட்டு வர இருமல் காணாமல் போகும். முருங்கையை வீட்டிற்கொரு மரமாக வளர்த்திருப்பார்கள். அதன் பயன் மிக மிக அதிகம். முருங்கை உடலுக்கு இரும்புச்சத்து அளித்து ரத்த விருத்தியை உண்டாக்கும்.

பசலையில் சிவப்பு, பச்சை என இரு வகைகள் உள்ளன. இரண்டுமே இரத்த விருத்தியையும் உடலுக்கு வலுவும் அளிக்கின்றன. வயலில் தேங்கும் தண்ணீரில் நான்கு இலைகளுடன் மிதக்கும் ஆரைக்கீரை சமைத்து சாப்பிட சுவையானது. குடலுக்கும் இதமானது.

இரும்புச்சத்து கொண்ட தண்டுக்கீரை பெண்களின் கருப்பை தொந்தரவுகளைத் தவிர்க்கக் கூடியது. கரிசலாங்கண்ணிகளில் மஞ்சள் நிறப்பூக்கள் கொண்டது உணவுக்கு ஏற்றது. வெள்ளை பூக்கள் கொண்ட கரிசலாங்கண்ணியை கலவைக்கீரையில் சேர்த்துக் கொள்ளலாம்.

தலைமுடி பாதுகாப்பிற்கு காய்ச்சப்படும் எண்ணெயில், கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, சிறுகீரை, மருதாணி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து சிறு அடைகளாகத் தட்டி, நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சவும். பின்னர் ஆற வைத்து வடிகட்டி எடுத்து கூந்தல் தைலமாக பயன்படுத்திவர, கூந்தல் கருமையாக செழித்து வளர்வதுடன் முடி உதிர்தலும் குறையும்.

தலையில் பொடுகு இருந்தால் பொடுதலை கீரையை அரைத்து தலையில் தடவி, சீயக்காய் தேய்த்துக் குளித்துவர விரைவில் நிவாரணம் கிடைக்கும். மேலும் பொடுதலை கீரையை துவையலாக அரைத்துச் சாப்பிட்டுவந்தால் பொடுகிலிருந்து சீக்கிரமே விடுதலை கிடைக்கும்.