1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அனைத்து பாகங்களும் மருத்துவகுணம் கொண்ட கண்டங்கத்திரி !!

கண்டங்கத்திரி என்பது செடி வகையை சேர்ந்தது. இவை எல்லா இடங்களிலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற  இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது.

கண்டங்கத்திரிக்கு வேறு பெயர்களும் உண்டு அவை கண்டன் கத்திரி, கண்டகாரி. இது சிறுநீரைப் பெருக்கும் குணமுடையது. வியர்வையை உண்டாக்கும்.
 
கண்டங்கத்திரியின் இலை, காய் மற்றும் வேர் முதலியவை மருந்தாகப் பயன்படுகின்றன. இலை சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி கால் கைகளிலுள்ள வெடிப்புகளுக்கு தடவி வர வெடிப்புகள் குணமாகும். இதன் காயை உடைத்து விதையை நீக்கிவிட்டு குழம்பு மற்றும் சாம்பார் செய்து  சாப்பிடுகின்றனர். இதனால் உடல் அலுப்பும்,இரும்பலும் சமனமாகி விடுகின்றன.
 
செடி முழுவதும் முட்கள் இருக்கும். இதன் பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும். கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை.
 
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைவலி, வாத நோய்களுக்கு பூசி வர குணம் கிடைக்கும்.
 
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து உடலில் தேய்த்து வர வேர்வை  நாற்றம் அகலும்.
 
கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர், சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை இடித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்டக்காய்ச்சி காலை, மாலை குடித்து வர கபம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.