வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 ஜூலை 2019 (13:40 IST)

ஃபேஸ்புக் நண்பர் பேசாததால் தற்கொலைக்கு முயன்ற வாலிபர்..

புதுவையில் ஃபேஸ்புக் நண்பர், பல நாட்கள் பேசாமல் இருந்ததால், வாலிபர் தற்கொலைக்கு முயன்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, புதுவையைச் சேர்ந்த வினோத் என்பவரும், கடலூரைச் சேர்ந்த சந்துரு என்பவரும் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாக ஆகினர். இவர்களின் நட்பு, செல்ஃபோனில் தினமும் பேசும் அளவுக்கு வளர்ந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக வினோத்திடம் சந்துரு பேசவில்லை. வினோத் சந்துருவிற்கு பல முறை தொடர்பு கொண்டும், சந்துரு பேசவில்லை. இதனால் மனமுடைந்த வினோத், வீட்டிலிருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே வினோத்தை அவரது பெற்றோர்கள் புதுவை அரசு மருத்துவனையில் சேர்த்தனர். வினோத் அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இந்த செய்தியை அறிந்த சந்துரு வினோத்தைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆனால் சந்துரு வினோத்திடம் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். இதனால் மேலும் விரக்தி அடைந்த வினோத், மருத்துவமனையின் மொட்டை மாடிக்குச் சென்று கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீஸாருக்கும், தீயணப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸாரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வினோத்திடம் சமாதானம் பேசி மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் வினோத், சந்துரு தன்னிடம் தொலைபேசியில் பேசினால் தான் கீழே இறங்கிவருவேன் என கூறியுள்ளார். ஒரு வழியாக போலீஸார் சந்துருவிற்கு ஃபோன் செய்து அவரை மருத்துவமனைக்கு மறுபடியும் வரவழைத்தனர்.

பின்னர் சந்துருவை வினோத் முன்பு நிற்கவைத்து கீழே இறங்குமாறு கூறினர். அதற்கு வினோத், தன்னிடம் எப்போதும் போல தினமும் ஃபோனில் பேசுவதாகசந்துரு வாக்கு கொடுத்தால் தான் இறங்கி வருவேன் என கூறியுள்ளார். உடனே சந்துரு வினோத்திடம் தினமும் செல்ஃபோனில் பேசுவதாக சத்தியம் செய்து கொடுத்தார். அதன் பின்பு இறங்கி வந்த வினோத்தை போலீஸார், அறிவுரை கூறி மீண்டும் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து சந்துருவிடம் கேட்டபோது, சில நாட்களுக்கு முன்பு போலீஸ் ஆள் எடுப்பு வேலைக்காக சென்றிருந்ததால் வினோத்திடம் பேசமுடியவில்லை என கூறினார். ஃபேஸ்புக் நண்பன் பேசவில்லை என்ற காரணத்தால் வாலிபர் தற்கொலைக்கு முயன்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.