60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதயாத்திரையில் வர வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்..!
திருப்பதிக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சிலர் யாத்திரை மேற்கொள்ள வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவின் பிரபலமான கோயில்களில் ஒன்றான திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதில் பெரும்பாலானோர் பாதயாத்திரை மூலம் வந்தடைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள வேண்டுகோள் அறிவிப்பில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டு பிரச்சனைகள் உடையவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரை மூலம் வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும் என்பதாலும், மேலும் உடல் பருமனாக உள்ளவர்கள் மற்றும் இதய நோய்க்காரர்கள் மலைப்பாதையில் நடந்து செல்வது நல்லதல்ல என்றும், அவர்கள் வாகனங்களில் வந்து தரிசனம் செய்யலாம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது."
Edited by Siva