விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்: மத்திய அரசு எச்சரிக்கை..!
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் கூட சென்னை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கும் தொடர்ந்து மிரட்டல் கொடுப்பது சகஜமாகிவிட்டது. ஒரே நாளில் 24 விமானங்களுக்கு மிரட்டல் கொடுக்கப்பட்ட சம்பவங்களும் சமீபத்தில் நடந்தது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 1000 வெடிகுண்டு மிரட்டல்கள் விமானங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்தில் மட்டும் 666 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
இது போன்ற மிரட்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மத்திய அரசு அதிரடியாக செயல்பட்டு வருகிறது. விளையாட்டாக அல்லது உள்நோக்கத்துடன் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால், ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதன் காரணமாக விமான நிறுவனங்களுக்கு மூன்று கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva