வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2024 (22:52 IST)

வயநாட்டில் இரவிலும் தொடரும் மீட்பு பணி.! மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணி தீவிரம்..!!

Kerala Landslide
நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாட்டில் இரவிலும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வயநாடு மாவட்டம் முண்டக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
 
அடுத்தடுத்து நிலச்சரிவு:
 
இதற்கான மீட்பு பணி நடைபெற்று வந்த போதே, மேப்படி மற்றும் சூரல்மலையில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில், நிவாரண முகாமாக செயல்பட்ட பள்ளி, வீடுகள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
 
Kerala Land
வெள்ளத்தில் சென்ற வீடுகள்:
 
மேலும், சூரல்மலையில் உள்ள பாலம் ஒன்றும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 4 மணிநேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளால் சூரல்மலை கிராமத்தில் மட்டும் 200 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.  
 
இரவில் தூங்கியபோதே வீடுகளுடன் ஏராளமானோர் புதையண்டனர். குறிப்பாக முண்டக்கை பகுதியில் வீடு மற்றும் கடைகள் இருந்ததற்கான சுவடுகளே தெரியாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
 
Rescue
மீட்கும் பணி தீவிரம்:
 
நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர்,  தீயணைப்பு துறையினர், ராணுவம், கடற்படை உள்ளிட்டவைகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. மண்ணில் புதைந்த உடல்களை கண்டறிய காவல்துறையில் உள்ள மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.

 
98 பேர் மாயம்:
 
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. மண்ணில் புதைந்தவர்களில் 98 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணி இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.