அக்னி வீரன் திட்டம், மணிப்பூர் கலவரம், வேளாண் சட்டங்கள், நீட் தேர்வு விவகாரங்கள் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, அக்னி வீரர் திட்டத்தில் ஒரு வீரர் உயிரிழந்தால், அதை வீர மரணமாக இந்த அரசு ஏற்காது என்று கூறினார்.
'யூஸ் அண்ட் த்ரோ':
அக்னி வீரர் திட்டத்தில் ஒரு வீரருக்கு 6 மாதங்கள் மட்டுமே பயிற்சி அளிக்கிறார்கள் என்றும் முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினர். அக்னி வீரர் திட்டம் என்பது 'யூஸ் அண்ட் த்ரோ' போன்றது என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.
6 மாதம் மட்டுமே பயிற்சி பெறும் வீரர், 5 ஆண்டு பயிற்சி பெறும் சீன வீரரை எப்படி எதிர்கொள்வார் என கேள்வி எழுப்பிய அவர், அக்னிவீரர் திட்டத்தால் ராணுவத்தில் பிளவு ஏற்படும் என்று தெரிவித்தார். ராணுவத்தில் உள்ள ஒருவருக்கு அதிக சலுகை கிடைக்கும் என்றும் மற்றவருக்கு சலுகை கிடைக்காது என்றும் அக்னிவீரர் திட்டம் ராணுவத்தின் திட்டமல்ல, பிரதமர் மோடியின் திட்டம் என்றும் ராகுல் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி தவறான விவரங்களை கூறுவதாக தெரிவித்தார். அக்னி வீரர் திட்டத்தில் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு தரப்படுகிறது என்றும் மக்களவையை தவறாக ராகுல் வழி நடத்துகிறார் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, மத்திய அரசின் கொள்கையால் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டது என்றும் மணிப்பூர் கலவரத்திற்கு மத்திய அரசே காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு கேள்வி:
மணிப்பூரை பற்றி எரியவிட்டு உள்நாட்டு போராக்கிவிட்டனர் என புகார் தெரிவித்த அவர், பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சரோ ஒரு முறை கூட மணிப்பூர் செல்லாதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார். கடவுளிடம் தொடர்பில் இருக்கும் மோடி, பணமதிப்பிழப்பு, அக்னிவீர் போன்ற திட்டங்களை கடவுளிடம் கேட்டுத்தான் கொண்டுவந்தாரா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய ராகுல், பிரதமர் மோடியே கடவுளிடம் தொடர்பில் இருப்பதாகவும் நான் இயல்பாக பிறந்தவன் அல்ல, பிதாமகன் என கூறியதாகவும் தெரிவித்தார்.
குஜராத்தில் பாஜகவை தோற்கடிப்போம்:
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்குமாறு கடவுளிடம் இருந்து செய்தி வந்திருக்கும் என்றும் அடுத்ததாக, மும்பை துறைமுகத்தை அம்பானிக்கு கொடுத்து விடுங்கள் என்று கடவுளிடம் இருந்து செய்தி வரும் என்றும் ராகுல் கூறினார். மேலும் குஜராத்தில் பாஜகவை இந்தியா கூட்டணி தோற்கடிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
விவசாயிகளை வஞ்சித்த சட்டங்கள்:
விவசாயிகளுக்காக நாங்கள் கொண்டுவந்த திட்டங்களை அகற்றவிட்டு, அவர்களை அச்சமூட்டும் வேளாண் சட்டங்களை கொண்டு வந்தீர்கள் என்று தெரிவித்த ராகுல் காந்தி, அந்த சட்டங்கள் விவசாயிகளுக்கானது அல்ல, அம்பானி, அதானிக்கானது என்றும் விமர்சித்தார். அரவணைத்து செல்ல வேண்டிய விவசாயிகளை பயங்கரவாதி என்றனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படவில்லை என்று அவர் வேதனை தெரிவித்தார்.
பணக்காரர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு:
ஏழைகள் மருத்துவர்கள் ஆகுவார்கள் என்று கூறி நீட் தேர்வை கொண்டு வந்தீர்கள் என்றும் ஆனால் இன்று நீட் தேர்வு வியாபாரமாகிவிட்டது என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். பணக்காரர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் நிலை ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார். நீட் தேர்வு ஆரம்பித்து 7 ஆண்டுகள் தான் ஆகின்றது என்றும் ஆனால் 7 ஆண்டுகளுக்கு 70 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் கடுமையாக சாடினார். நீட் தேர்வு எனும் தொழிற்கல்வியை வியாபார கல்வியாக மாற்றிவிட்டார்கள் என்று அவர் விமர்சித்தார்.
நீட் தேர்வின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது என்றும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த கோரினால் மத்திய அரசு மறுக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். குடியரசு தலைவர் உரையில் கூட நீட் தேர்வு பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.