திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 16 ஜூலை 2017 (10:37 IST)

ரூபாவிடம் போட்டுக்கொடுத்த கைதிக்கு அடி-உதை - சிறை அதிகாரிகள் மீது புகார்

பெங்களூர் பரப்பன அக்ராஹார சிறையில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்து சிறைத்துறை டிஐஜி ரூபாவிற்கு சில தகவல்களை கூறிய ஒரு கைதியை சிறை அதிகாரிகள் கொடூரமாக தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக சில சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த  14ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார். 
 
அதன் பின் அவர் மீண்டும் நேற்று சிறைக்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது சில அதிகாரிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  மேலும், அவருக்கு எதிராக சில கைதிகள் கோஷம் எழுப்பினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரூபா, சிறையில் தான் எடுத்த வீடியோக்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டினார்.
 
இந்நிலையில், சிறையில் ரூபா சோதனை செய்த போது, ராமமூர்த்தி என்ற கைதி, சிறையில் உள்ள விதிமுறை மீறல்கள் பற்றி தகவல் கொடுத்துள்ளார். எனவே அவரை சிறை சுப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆபாசமாக திட்டியதோடு, அவரை அடித்து உதைத்தாக தெரிகிறது. இதையடுத்து, கிருஷ்ணகுமார் மீது நடவடிக்கை எடுக்கும் படி, ராமமூர்த்தியின் மனைவி அனிதா என்பவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.