பேரறிவாளன் விடுவிக்கப்படாதது மிகவும் சந்தோஷம் - சுப்பிரமணியன் சுவாமி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தது வரவேற்க வேண்டிய விஷயம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 27 வருடங்களாக பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய ஏழு பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
தமிழக அரசு பேரறிவாளன் உட்பட ஏழு பேரை கருணை அடிப்படையில் விடுவிக்க, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலை குறித்து 3 மாத்ததில் முடிவெடுக்கும்படி உச்சநீதிமன்றம் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது.
உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி, பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுவிக்க முடியாது எனக் கூறி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ராஜீவ் காந்தி கொலையாளிகளின் விடுதலை குறித்து, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டவிரோத தீர்மானத்தை குடியரசுத் தலைவர் ராஜ்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. குற்றவாளிகள் தூக்கிலிருந்து தப்பித்ததே அவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம், மேலும் இந்த கொலையின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் வசித்து வருகிறார் என அவர் தெரிவித்துள்ளார்.