பட்ஜெட் தினத்தில் பரபரப்பே இல்லாத பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!
பொதுவாக, மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பதும், மிகப் பெரிய அளவில் பங்குச்சந்தை உயரும் என்பதும் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
ஆனால் இன்று, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால், சனிக்கிழமையாக இருந்தாலும் பங்குச்சந்தை வர்த்தகம் நடைபெற்றது. ஆனால், பங்குச்சந்தையில் எந்த பெரிய மாற்றமும் இல்லாமல், சிறிய அளவில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியவுடன் நல்ல ஏற்றத்தில் இருந்தாலும், அதன் பிறகு படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை குறைந்தது. அதன் பின்னர், மீண்டும் பங்குச்சந்தை படிப்படியாக உயர்ந்து, சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 20 புள்ளிகள் மட்டுமே சேர்ந்து, 77,474 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தை 34 புள்ளிகள் குறைந்து, 23,470 புள்ளிகளில் முடிந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தினத்தில் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் நிலையில், இந்த ஆண்டு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran