தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!
ஒடிசா மாநிலத்தில் தந்தையின் தலையை கோடாரியால் வெட்டிய மகன், தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் என்ற பகுதியில், எழுபது வயது நபருக்கு சம்பு சிங் என்ற 40 வயது மகன் உள்ளார். இந்த நிலையில், சம்பூ சிங் தனது தந்தையிடம் அடிக்கடி மது அருந்துவதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு, வீட்டிற்கு தாமதமாக வந்த மகனை தாய், தந்தையர் கண்டித்துள்ளனர். அப்போது சம்பூ சிங் மீண்டும் தந்தையிடம் பணம் கேட்டுக் கொண்டிருந்தார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கோபமடைந்த சம்பு சிங், அருகில் இருந்த கோடாரியை எடுத்து தனது தந்தையின் தலையை துண்டித்துள்ளார். தடுக்க வந்த தாயையும் கீழே தள்ளிவிட்டார்.
இதன் பிறகு, தந்தையின் தலையை ஒரு சாக்குப் பையில் போட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த தகவல் அறிந்து காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். கொலை செய்த போது சம்பூ சிங் குடிபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாயின் புகாரின் அடிப்படையில், சம்பூ சிங்கிற்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran