வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 4 ஜூலை 2019 (11:38 IST)

பாஜக-வில் இணைந்தால் 40 கோடியா?..கர்நாடகா எம்.எல்.ஏ அதிர்ச்சி

மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ மகாதேவ், கட்சி மாறுவதற்கு தனக்கு பாஜக 40 கோடி தர முன்வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு ஆனந்த் சிங் மற்றும் ரமேஷ் ஜார்கிகோலி ஆகிய இரு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பலர் பாஜக-வில் இணைந்தனர். தமிழகத்திலும் சென்ற வாரம் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்தனர்.

இந்த கட்சி மாறுதலை வைத்து பாஜக ‘ஆப்ரேஷன் கமலா’ என்ற ஒரு திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக பல வதந்திகள் கிளம்பின. இந்நிலையில் தற்போது கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ மகாதேவ், தான் பாஜகவில் இணைய, பாஜகவினர் தன்னிடம் 40 கோடி விலை பேசினர் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

இதனிடயே பாஜக ஊழல் மூலம் சம்பாதித்ததை, எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில் தற்போது பாஜகவில் சேர மதச்சார்பற்ற கட்சி எம்.எல்.ஏ-வுக்கு 40 கோடி விலை பேசப்பட்ட செய்தி, பாஜக-வின் நடவடிக்கைகளின் மீது, பிற அரசியல் கட்சிகள் சந்தேகப் பார்வையோடு நோக்கவைத்துள்ளது.

மேலும் பாஜக, கர்நாடக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க திட்டம் தீட்டுவது குறித்து மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, அதற்கான எந்த சான்றுகளும் இல்லை என்றும், கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.