வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (10:59 IST)

தரமற்ற ஏலக்காயால் வீணாய் போன சபரிமலை பிரசாதம்! – ரூ 6.50 கோடி நஷ்டம்!

Aravanai
சபரிமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதத்தில் தரமற்ற ஏலக்காய் பயன்படுத்தப்பட்டதாக அதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

மார்கழி மாதத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு, இருமுடி கட்டி பக்தர்கள் பலர் யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது. அவ்வாறாக யாத்திரை செல்லும் பக்தர்கள் சபரிமலையில் விற்பனையாகும் அரவணை பிரசாதத்தை தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுக்காக வாங்கி செல்கின்றனர். இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான அரவணை பிரசாதங்கள் விற்பனையாகின்றன.

இந்நிலையில் அரவணை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமற்றதாகவும், அதிகம் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கேரள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் குழு ஒன்று சபரிமலை அரவணை பிரசாதத்தை ஆய்வு செய்ததில் அதில் பயன்படுத்தப்பட்ட ஏலக்காய் தரமற்றதாகவும், அதிக பூச்சிக்கொல்லி உள்ளதாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது.



எனினும் அரவணையில் 0.20 சதவீதமே ஏலக்காய் பயன்படுத்தப்படுவதாகவும், அரவணை 200 டிகிரி வெப்பநிலைக்கு மேல் காய்ச்சப்படுவதால் பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு இருக்காது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், தரமற்ற ஏலக்காயில் தயாரிக்கப்பட்ட அரவணை விற்பனையை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்காக தயாரிக்கப்பட்ட 6.50 லட்சம் அரவணை டின்கள் வீண் ஆனது. இதனால் 6.50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனினும் சபரிமலை நிர்வாகம் ஏலக்காய் சேர்க்காத அரவணைகளை தற்போது தயாரித்து பக்தர்களுக்கு வழங்கி வருகிறது.

Edit By Prasanth.K